The Greatness of a King 39

381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.

படை குடி கூழ்‌ அமைச்சு நட்பு அரண்‌ என்று கூறப்படும்‌ ஆறு அங்கங்களையும்‌ உடையவனே அரசருள்‌ ஆண்‌ சிங்கம்‌ போன்றவன்‌.

He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is alion among kings.

பரிமேலழகர் உரை படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான்-படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன்; அரசருள் ஏறு - அரசருள் ஏறு போல்வான்.
விளக்கம்:
(ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை; 'கூழ்' என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்பதே முறையாயினும், ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரச நீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப் பெயர் கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு. இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிக்கு ஏது என்பதூஉம் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை இதனுள், இறைமாட்சியாவது இறைவனது உண்மை கூறுதல். இவ் வதிகாரத்துள் உரைக்கின்ற பொருள் அரசரை நோக்கிற்றாதலானும் அரசன் மக்களிற் சிறந்தானாதலானும் இவ்வதிகா ரங் கூறப்பட்டது. (இதன் பொருள்) படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறு பொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வான்,
(என்றவாறு). ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாகுவன கூறிற்று.
382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.

அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும்‌ குறைவுபடாமல்‌ இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்‌.

Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kinglycharacter.

பரிமேலழகர் உரை வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - தீமையும் கொடையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்.
விளக்கம்:
(ஊக்கம்: வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு குரித்து; ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையும் மென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு,
(என்றவாறு).
383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு

A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.

காலம்‌ தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும்‌ நிலத்தை ஆளும்‌ அரசனுக்கு நீங்காமல்‌ இருக்க வேண்டியவை.

These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of acountry.

பரிமேலழகர் உரை நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா.
விளக்கம்:
(கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின், அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி, ஆறு அங்கத்திற்கும் உரித்து ஏனைய, வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள் பவனுக்கு நீங்காமல் வேண்டும், (எ – று).
384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு

Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour’s grace maintains.

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில்‌ தவறாமல்‌, அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில்‌ குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன்‌ ஆவான்‌.

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

பரிமேலழகர் உரை அறன் இழுக்காது - தனக்கு ஓதிய அறத்தின் வழுவாது ஒழுகி; அல்லவை நீக்கி - அறனல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து; மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.
விளக்கம்:
(அவ்வறமாவது. ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத் தொழிலினும்; படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத் தொழிலினும் வழுவாது நிற்றல். 'மாண்ட, அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" (புற நா. 65) என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது, "வீறின்மையின் விலங்காம்என மதவேழமும் எறியான் - ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் - மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் - ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்" (சீவக. மண்மக. 159) எனவும், "அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான்" (பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை; அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறத்திற் றப்பாமலொழுகி, அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து, மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்,
(என்றவாறு).
385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom’s weal expends.

பொருள்‌ வரும்‌ வழிகளை மேன்மேலும்‌ இயற்றலும்‌ வந்த பொருள்களைச்‌ சேர்த்தலும்‌, காத்தலு காத்தவற்றை வகுத்துச்‌ செலவு செய்தலும்‌ வல்லவன்‌ அரசன்‌.

He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.

பரிமேலழகர் உரை இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும்; ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும்; காத்தலும் - தொகுத்தவற்றை பிறர் கொள்ளாமல் காத்தலும்; காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும்; வல்லது அரசு - வல்லவனே அரசன்.
விளக்கம்:
(ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, 'இயற்றல்' என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. (பொருள்களாவன; மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன; பகைவரை அழித்தலும், திறை கோடலும், தன் நாடு தலையளித்தலும் முதலாயின. 'பிறர்' என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினார். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்; யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும்; மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலிய தவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார். இவை நான்கு பாட்டானும் மாட்சியே கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருள் வரும்வழியியற்றலும், அதனை அழியாமலீட்ட லும், அதனைச் சோர்வுபடாமற் காத்தலும், காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்,
(என்றவாறு). பகுத்தல் - யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.
386

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம

Where king is easy of access, where no harsh word repels,
That land’s high praises every subject swells.

5காண்பதற்கு எளியவனாய்‌, கடுஞ்சொல்‌ கூறாதவனாய்‌ இருந்தால்‌, அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம்‌ புகழும்‌.

The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harshlanguage.

பரிமேலழகர் உரை காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய்; கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ் சொல்லன் அல்லனும் ஆயின்; மன்னன் நிலம் மீக்கூறும் - அம்மன்னனது நிலத்தை எல்லா நிலங்களினும் உயர்த்துக் கூறும் உலகம்.
விளக்கம்:
(முறை வேண்டினார்: வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார்: வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்த . கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல், 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின், அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்,
(என்றவாறு). இது மன்னன் உலகத்தார் மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.
387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
He sees the world obedient all to his command.

இனிய சொற்களுடன்‌ தக்கவர்க்குப்‌ பொருளை உதவிக்‌ காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம்‌ தன்‌ புகழோடு தான்‌ கருதியபடி அமைவதாகும்‌.

The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, andto protect all who come to him.

பரிமேலழகர் உரை இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு; இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.
விளக்கம்:
(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல் காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.) --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரச னுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற்போலும் தன் வசத்தே கிடக்கும்,
(என்றவாறு)
388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

Who guards the realm and justice strict maintains,
That king as god o’er subject people reigns.

நீதிமுறை செய்து குடிமக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னவன்‌, மக்களுக்குத்‌ தலைவன்‌ என்று தனியே கருதி மதிக்கப்படுவான்‌.

That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (hissubjects).

பரிமேலழகர் உரை முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்; மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செய்வான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.
விளக்கம்:
(முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன், மனிதர்க்கு நாயக னென்று எண்ணப்படுவான்,
(என்றவாறு).
389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure.

குறைகூறுவோரின்‌ சொற்களைச்‌ செவி கைக்கும்‌ நிலையிலும்‌ பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில்‌ உலகம்‌ தங்கும்‌.

The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter theear.

பரிமேலழகர் உரை சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடைவேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது; கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்.
விளக்கம்:
('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, 'இடிக்குந் துணையாயினார்' என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை: விசேட உணர்வினனாதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும்,
(என்றவாறு) சொற் பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.
390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

Gifts, grace, right sceptre, care of people’s weal;
These four a light of dreaded kings reveal.

கொடை, அருள்‌, செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக்‌ காத்தல்‌ ஆகிய நான்கும்‌ உடைய அரசன்‌, அரசர்க்கெல்லாம்‌ விளக்குப்‌ போன்றவன்‌.

He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care forhis people.

பரிமேலழகர் உரை கொடை வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும்; அளி - யாவர்க்கும் தலையளி செய்தலும்; செங்கோல் முறை செய்தலும்; குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய; நான்கும் உடையான் - இந்நான்கு செயலையும் உடையான்; வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தார்க்கு எல்லாம் விளக்கு ஆம்.
விளக்கம்:
(தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல். செவ்விய கோல் போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' என எடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது, ஆறில் ஒன்றாய பொருள்தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு' என்றார். ஒளி-ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும் பயனும் உடன் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும், குடி சீளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம்,
(என்றவாறு). கொடுத்தல் - தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்; அளித் தல் - அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்; செங்கோன்மை - கொள்ளும் முறையைக் குறையக்கொள்ளாமை; குடியோம்பல் - தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய் யுந் திறங் கூறிற்று.


transliteration

pataikuti koolamaichsu natparan aarum
utaiyaan aracharul yaeru

anjsaamai eekai arivookkam indhnaankum
yenjsaamai vaendhthark kiyalpu

thoongkaamai kalvi thunivutaimai immoonrum
neengkaa nilanaal pavarkku

aranilukkaa thallavai neekki maranilukkaa
maanam utaiya tharasu

iyatrralum eetdalung kaaththalum kaaththa
vakuththalum valla tharasu

kaachik keliyan kadunjsollan allanael
meekkoorum mannan nilama

insolaal eeththalikka vallaarkkuth thansolaal
thaankan danaiththiv vulaku

muraiseithu kaappaatrrum mannavan makkatku
iraiyaenru vaikkap padum

sevikaippach sotrporukkum panputai vaendhthan
kavikaikkeelth thangkum ulaku

kotaiyali sengkoal kutiyompal naankum
utaiyaanaam vaendhthark koli