குறள் 390

இறைமாட்சி

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

kotaiyali sengkoal kutiyompal naankum
utaiyaanaam vaendhthark koli


Shuddhananda Bharati

The grandeur of monarchy

He is the Light of Kings who has
Bounty, justice, care and grace.


GU Pope

The Greatness of a King

Gifts, grace, right sceptre, care of people's weal;
These four a light of dreaded kings reveal.

He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care forhis people.


Mu. Varadarajan

கொடை, அருள்‌, செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக்‌ காத்தல்‌ ஆகிய நான்கும்‌ உடைய அரசன்‌, அரசர்க்கெல்லாம்‌ விளக்குப்‌ போன்றவன்‌.


Parimelalagar

கொடை வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும்; அளி - யாவர்க்கும் தலையளி செய்தலும்; செங்கோல் முறை செய்தலும்; குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய; நான்கும் உடையான் - இந்நான்கு செயலையும் உடையான்; வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தார்க்கு எல்லாம் விளக்கு ஆம்.
விளக்கம்:
(தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல். செவ்விய கோல் போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' என எடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது, ஆறில் ஒன்றாய பொருள்தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு' என்றார். ஒளி-ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும் பயனும் உடன் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும், குடி சீளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம்,
(என்றவாறு). கொடுத்தல் - தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்; அளித் தல் - அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்; செங்கோன்மை - கொள்ளும் முறையைக் குறையக்கொள்ளாமை; குடியோம்பல் - தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய் யுந் திறங் கூறிற்று.