Separation unendurable 116

1151

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

If you will say, ‘I leave thee not,’ then tell me so;
Of quick return tell those that can survive this woe.

பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால்‌ எனக்குச்‌ சொல்‌; பிரிந்து சென்று விரைந்து வருதலைப்‌ பற்றியானால்‌ அதுவரையில்‌ உயிர்‌ வாழ வல்லவர்க்குச்‌ சொல்.

If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

பரிமேலழகர் உரை 'பிரிந்து கடிதின் வருவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல்.
விளக்கம்:
(தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்காலமெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன். இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை பிரிவாற்றாமையாவது அலரறிவுறுத்தல் படத் தலைமகன் தலைமகளை வரைந்து கொண்டு இன்புறுமாயினும், பிரியுங்காலத்து ஆற்றாமை கூறுதல். மேல தனோடியையும் இது. இது முதலாகக் கற்பென்று கொள்ளப்படும். (இதன் பொருள்) காதலர் போகாமையுண்டாயின், எனக்குக் கூறு ; பிரிந்தார் நீட்டி யாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ் வார்க்குக் கூறு,
(என்றவாறு). இது கடித்து வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.
1152

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

It once was perfect joy to look upon his face;
But now the fear of parting saddens each embrace.

அவருடைய பார்வை முன்பு இன்பம்‌ உடையதாக இருந்தது; இப்போது அவருடைய கூட்டம்‌ பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம்‌ உடையதாக இருக்கின்றது.

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.

பரிமேலழகர் உரை பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்ப முடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புண் கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.
விளக்கம்:
('பார்வல்' என்றதனால், புணர்ச்சிபெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப் பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, ''முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந்தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்'' (கலித்.பாலை. 3) பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதற் குறிப்புக் காட்டி அச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நங்காதலரை வரவு பார்த்திருக்கு மது , இன்பத்தையுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு, பிரிவாரோவென்று அஞ்சப்படுந் துன்பத்தை யுடைத்து,
(என்றவாறு).
1153

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்

To trust henceforth is hard, if ever he depart,
E’en he, who knows his promise and my breaking heart.

அறிவுடைய காதலரிடத்தும்‌ பிரிவு ஒரு காலத்தில்‌ உள்ளபடியால்‌, அவர்‌ ‘பிரியேன்‌’ என்று சொல்லும்‌ உறுதிமொழியை நம்பித்‌ தெளிவது அரிது.

As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

பரிமேலழகர் உரை இதுவும் அது. அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத் தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. அரோ: அசைநிலை. உம்மை : உயர்வு சிறப்பின்கண் வந்தது.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிரியேனென்ற தஞ் சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிந்த லுடையராய காதலர்கண்ணும், ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான், அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது.
1154

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

If he depart, who fondly said, ‘Fear not,’ what blame’s incurred
By those who trusted to his reassuring word?

அருள்‌ மிகுந்தவராய்‌ அஞ்ச வேண்டா! என்று முன்‌ தேற்றியவர்‌ பிரிந்து செல்வாரானால்‌ அவர்‌ கூறிய உறுதி மொழியை நம்பித்‌ தெளிந்தவர்க்குக்‌ குற்றம்‌ உண்டோ?

If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?

பரிமேலழகர் உரை இதுவும் அது. அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, 'நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் ஊண்டோ?
விளக்கம்:
('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போற் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும்; அஃது எய்தாவகை அழுங்குவி' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நம்மைத் தலையளி செய்து நின்னிற் பிரியேன், நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின், அவர் தெரிவித்த சொல்லைத் தெளிந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ ?
(என்றவாறு). தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.
1155

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

If you would guard my life, from going him restrain
Who fills my life! If he depart, hardly we meet again.

காத்துக்‌ கொள்வதானால்‌ காதலராக அமைந்தவரின்‌ பிரிவு நேராமல்‌ காக்க வேண்டும்‌; அவர்‌ பிரிந்து நீங்கினால்‌ மீண்டும்‌ கூடுதல்‌ அரிது.

If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs,intercourse will become impossible.

பரிமேலழகர் உரை இதுவும் அது. ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம்.
விளக்கம்:
(ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று; வினைமாற்றின்கண் வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க ; அவர் பிரிவராயின், பின்பு கூடுதல் அரிது,
(என்றவாறு). மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
1156

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை

To cherish longing hope that he should ever gracious be,
Is hard, when he could stand, and of departure speak to me.

பிரிவைப்பற்றித்‌ தெரிவிக்கும்‌ அளவிற்குக்‌ கல்‌ நெஞ்சம்‌ உடையவரானால்‌, அத்தகையவர்‌ திரும்பி வந்து அன்பு செய்வார்‌ என்னும்‌ ஆசை பயனற்றது.

If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

பரிமேலழகர் உரை தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்துசொல்லிய தோழிக்குச் சொல்லியது. அவர் பிரிவு உரைக்கும் வண்கண்ணராயின் - நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்றும் தம் பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.
விளக்கம்:
(அருமை: பயன்படுதல் இல்லாமை. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது?' என்பதாம். அழுங்குவித்தல்: பயன்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின், அவர் மறுத்து வந்து நல்குவரென்னும் ஆசை யில்லை,
(என்றவாறு). இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.
1157

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

The bracelet slipping from my wrist announced before
Departure of the Prince that rules the ocean shore.

என்‌ மெலிவால்‌ முன்கையில்‌ இறைகடந்து சுழலும்‌ வளையல்கள்‌, தலைவன்‌ விட்டுப்‌ பிரிந்த செய்தியைப்‌ பலரறியத்‌ தெரிவித்துத்‌ தூற்றாமலிருக்குமோ?

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?

பரிமேலழகர் உரை இதுவும் அது. துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் உனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ?
விளக்கம்:
(முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்கு வித்து வந்து கூறற்பாலை யல்லையாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்;' எனப் புலந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கை யின் இறையைக் கடவாநின்ற வளைகள், (எ - று ) முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.
1158

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

‘Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
‘Tis sadder still to bid a friend beloved farewell.

இனத்தவராக நம்மேல்‌ அன்புடையார்‌ இல்லாத ஊரில்‌ வாழ்தல்‌ துன்பமானது; இனிய காதலரின்‌ பிரிவு அதைவிடத்‌ துன்பமானது.

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one’s lover.

பரிமேலழகர் உரை மதுவும் அது. இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தன் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
விளக்கம்:
(தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின், 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்கு இன்பமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது ; இனியாரைப் பிரிதல், அதனினும் இன்னாது,
(என்றவாறு). இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவா மென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.
1159

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

Fire burns the hands that touch; but smart of love
Will burn in hearts that far away remove.

நெருப்பு, தன்னைத்‌ தொட்டால்‌ சுடுமே அல்லாமல்‌ காமநோய்போல்‌ தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?

பரிமேலழகர் உரை 'காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதலல்லது; காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ? மாட்டாது.
விளக்கம்:
(சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப் படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'கடல்' என்றார். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தீண்டினாற் சுடுமல்லது காமநோய் போல், நீங்கினாற் சுட வற்றோ தீ,
(என்றவாறு). தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழிகூறியது.
1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்

O Sorrow’s sadness meek sustaining, Driving sore distress away,
Separation uncomplaining Many bear the livelong day!

பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு,(பிரியும்‌ போது) துன்பத்தால்‌ கலங்குவதையும்‌ விட்டு, பிரிந்தபின்‌ பொறுத்திருந்து பின்னும்‌ உயிரோடிருந்து வாழ்வோர்‌ உலகில்‌ பலர்‌.

As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.

பரிமேலழகர் உரை 'தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை,'என்ற தோழிக்குச் சொல்லியது. நீ சொல்லுகின்றது ஒக்கும், அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் - பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர் வாழும் மகளிர் உலகத்துப் பலர்.
விளக்கம்:
(பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக் கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரிய தொன்றாகலின், 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந்தேயத்து அவர்க்கு யாது நிகழும்?' என்றும், 'வருந்துணையும்யாம் ஆற்றியிருக்குமாறு என்?' என்றும், 'அவ்வளவுதான் எஞ்ஞான்றும் வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காமவேதனையும், புறத்து யாழிசை, மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா 'மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை' என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப் பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணர நின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும் இறந்து படுவல்' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொறுத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கி, பிரிவையும் பொறுத்து, காதலரை நீங்கிய பின் தமியாரா யிருந்து வாழ் வார் பலர்,
(என்றவாறு). அல்லல் நோய் - காமவேதனை. பிரிவாற்றுதல் - புணர்ச்சி யின்மையைப் பொறுத்தல்.


transliteration

sellaamai untael yenakkurai matrrunin
valvaravu vaalvaark kurai

inkan utaiththavar paarval pirivanjsum
punkan utaiththaal punarvu

aritharoa thaetrram arivutaiyaar kannum
pirivo ridaththunmai yaan

aliththanjchal yenravar neeppin thaeliththasol
thaeriyaarkku untoh thavaru

oampin amaindhthaar pirivompal matrravar
neengkin arithaal punarvu

pirivuraikkum vankannar aayin arithavar
nalkuvar yennum nasai

thuraivan thurandhthamai thootrraakol munkai
iraiiravaa ninra valai

innaathu inaniloor vaalthal athaninum
innaathu iniyaarp pirivu

thotitrsutin allathu kaamanoi pola
vititrsudal aatrrumo thee

arithaatrri allalnoi neekkip pirivaatrrip
pinirundhthu vaalvaar palar