குறள் 1160

பிரிவாற்றாமை

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்

arithaatrri allalnoi neekkip pirivaatrrip
pinirundhthu vaalvaar palar


Shuddhananda Bharati

Pangs of separation

Many survive pangs of parting
Not I this sore so distressing.


GU Pope

Separation unendurable

O Sorrow's sadness meek sustaining, Driving sore distress away,
Separation uncomplaining Many bear the livelong day!

As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.


Mu. Varadarajan

பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு,(பிரியும்‌ போது) துன்பத்தால்‌ கலங்குவதையும்‌ விட்டு, பிரிந்தபின்‌ பொறுத்திருந்து பின்னும்‌ உயிரோடிருந்து வாழ்வோர்‌ உலகில்‌ பலர்‌.


Parimelalagar

'தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை,'என்ற தோழிக்குச் சொல்லியது. நீ சொல்லுகின்றது ஒக்கும், அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் - பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர் வாழும் மகளிர் உலகத்துப் பலர்.
விளக்கம்:
(பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக் கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரிய தொன்றாகலின், 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந்தேயத்து அவர்க்கு யாது நிகழும்?' என்றும், 'வருந்துணையும்யாம் ஆற்றியிருக்குமாறு என்?' என்றும், 'அவ்வளவுதான் எஞ்ஞான்றும் வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காமவேதனையும், புறத்து யாழிசை, மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா 'மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை' என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப் பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணர நின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும் இறந்து படுவல்' என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) பொறுத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கி, பிரிவையும் பொறுத்து, காதலரை நீங்கிய பின் தமியாரா யிருந்து வாழ் வார் பலர்,
(என்றவாறு). அல்லல் நோய் - காமவேதனை. பிரிவாற்றுதல் - புணர்ச்சி யின்மையைப் பொறுத்தல்.