குறள் 1158

பிரிவாற்றாமை

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

innaathu inaniloor vaalthal athaninum
innaathu iniyaarp pirivu


Shuddhananda Bharati

Pangs of separation

Bitter is life in friendless place;
Worse is parting love's embrace!


GU Pope

Separation unendurable

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
'Tis sadder still to bid a friend beloved farewell.

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.


Mu. Varadarajan

இனத்தவராக நம்மேல்‌ அன்புடையார்‌ இல்லாத ஊரில்‌ வாழ்தல்‌ துன்பமானது; இனிய காதலரின்‌ பிரிவு அதைவிடத்‌ துன்பமானது.


Parimelalagar

மதுவும் அது. இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தன் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
விளக்கம்:
(தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின், 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) தமக்கு இன்பமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது ; இனியாரைப் பிரிதல், அதனினும் இன்னாது,
(என்றவாறு). இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவா மென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.