Recognition of the Signs (of Mutual Love) 110

1091

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again.

இவளுடைய மை தீட்டிய கண்களில்‌ உள்ளது இருவகைப்‌ பட்ட நோக்கமாகும்‌; அவற்றுள்‌ ஒரு நோக்கம்‌ நோய்‌ செய்யும்‌ நோக்கம்‌; மற்றொன்று அந்‌ நோய்க்கு மருந்தாகும்‌.

There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

பரிமேலழகர் உரை தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது. இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்ததாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என் கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.
விளக்கம்:
(உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தனாய காமக்குறிப்பினை வெளிப்படுத்துகின்ற நோக்கு. மருந்தாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்; அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக. அவ்வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.)
மணக்குடவர் உரை குறிப்பறிதலாவது தலைமகளுள்ளக் குறிப்பினைத் தலைமக னறிதல். (இதன் பொருள்) இவள் உண் கண்ணிலுள்ள நோக்கம் இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும், ஒரு நோக்கு அதற்கு மருந்தாம் , (
(என்றவாறு) நோய்நோக்கென்பது முதல் நோக்கின நோக்கம் ; மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நானோடுகூடி நோக் கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.
1092

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

The furtive glance, that gleams one instant bright,
Is more than half of love’s supreme delight.

கண்ணால்‌ என்னை நோக்கிக்‌ களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில்‌ நேர்பாதி அன்று; அதைவிடப்‌ பெரிய பகுதியாகும்‌.

A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

பரிமேலழகர் உரை இதுவும் அது. கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும்.
விளக்கம்:
(தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும், நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவு கொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், 'இனிப் புணர்த்ல் ஒருதலை' என்பான் 'செம்பாகம் அன்று; பெரிது' என்றும் கூறினான்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என் கண்களைச் சோர்வு பார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம், வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று ; பெரிது,
(என்றவாறு). தலைமகள் தலைமகன் காணாமை நோக்குதலின், அது கள் வாயிற்று.
1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

She looked, and looking drooped her head:
On springing shoot of love ‘its water shed!

என்னை நோக்கினாள்‌; யான்‌ கண்டதும்‌, நோக்கித்‌ தலைகுனிந்தாள்‌; அது அவள்‌ வளர்க்கும்‌ அன்பினுள்‌ வார்க்கின்ற நீராகும்‌.

She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

பரிமேலழகர் உரை நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது. நோக்கினாள் - யான் நோக்கா அளவில்தான் என்னை அன்போடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் - நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றி அன்புப் பயிர் வளர அதற்கண் அவள் வார்த்த நீராயிற்று.
விளக்கம்:
(அஃது என்னும் சுட்டுப் பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முற்பட நோக்கினாள், நோக்கின் பின்பு நாணினாள் , அஃது அவள் நட்புப் பயிர்வளர அதன்கண் வார்த்த நீர்,
(என்றவாறு). தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.
1094

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

I look on her: her eyes are on the ground the while:
I look away: she looks on me with timid smile.

யான்‌ நோக்கும்போது அவள்‌ நிலத்தை நோக்குவாள்‌; யான்‌ நோக்காதபோது அவள்‌ என்னை நோக்கி மெல்லத்‌ தனக்குள்‌ மகிழ்வாள்‌.

When I look, she looks down; when I do not, she looks and smiles gently.

பரிமேலழகர் உரை நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது. யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்கா நிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
விளக்கம்:
(மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யான் தன்னைப்பார்க்குங்கால், தான் நிலத்தைப்பார்க்கும், யான் பாராத விடத்து, தான் பார்த்துத் தோன்றாமை நகும்,
(என்றவாறு). மெல்ல நகுதல் - முகிழமுகிழ்த்தல்.
1095

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும

She seemed to see me not; but yet the maid
Her love, by smiling side-long glance, betrayed.

என்னை நேராகக்‌ குறித்துப்‌ பார்க்காத அத்தன்மையே அல்லாமல்‌, ஒரு கண்ணைச்‌ சுருக்கினவள்போல்‌ என்னைப்‌ பார்த்துத்‌ தனக்குள்‌ மகிழ்வாள்‌.

She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

பரிமேலழகர் உரை இதுவும் அது. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத துணையல்லது; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணை சிரங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
விளக்கம்:
(சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம். சிறக்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல' என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். 'இனி இவளை எய்துதல் ஒருதலை' என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்தள்,
(என்றவாறு). அஃதாவது காமக்குறிப்புடையார் போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின், போல என்றார். இது தன் குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுத்த லாமென்றது.
1096

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

Though with their lips affection they disown,
Yet, when they hate us not, ‘tis quickly known.

புறத்தே அயலார்போல்‌ அன்பில்லாத சொற்களைச்‌ சொன்னாலும்‌ அகத்தே பகையில்லாதவரின்‌ சொல்‌ என்பது விரைவில்‌ அறியப்படும்‌.

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

பரிமேலழகர் உரை தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர்போலக் கடுஞ்சொற் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தால் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும்.
விளக்கம்:
(கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து; வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றவை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உள்ளதென்று விரைந்தறிதல் வேண்டும். (-) இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலா மென்றது.
1097

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு

The slighting words that anger feign, while eyes their love reveal.
Are signs of those that love, but would their love conceal.

பகைகொள்ளாத கடுஞ்சொல்லும்‌, பகைவர்போல்‌ பார்க்கும்‌ பார்வையும்‌ புறத்தே அயலார்போல்‌ இருந்து அகத்தே அன்பு கொண்டவரின்‌ குறிப்பாகும்‌.

Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

பரிமேலழகர் உரை இதுவும் அது. செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவன.
விளக்கம்:
(குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல் நோக்குதலும், அன்புறா தார்போல் அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்,
(என்றவாறு). இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின், உடன்பாடென்று தேறி யது.
1098

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

I gaze, the tender maid relents the while;
And, oh the matchless grace of that soft smile!

யான்‌ நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய்‌ மெல்லச்‌ சிரிப்பாள்‌; அசையும்‌ மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர்‌ அழகு உள்ளது.

When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign forme.

பரிமேலழகர் உரை தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது. யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கிய இயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு.
விளக்கம்:
(ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு, யான் நோக்க, நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள்,
(என்றவாறு). அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம் ; அழகு - தன்வடிவினுள் மிக்க குணம் ; பைய நகுதல் - ஓசைப்படாமல் நகுதல்.
1099

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

The look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers’ eyes.

புறத்தே அயலார்போல்‌ அன்பில்லாத பொதுநோக்கம்‌ கொண்டு பார்த்தல்‌, அகத்தே காதல்‌ கொண்டவரிடம்‌ உள்ள ஓர்‌ இயல்பாகும்‌.

Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

பரிமேலழகர் உரை தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையார் கண்ணே உளவாகாநின்றன.
விளக்கம்:
(பொது நோக்கு; யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர் கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண் தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சி போல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார் 8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல், காதலித்தார் மாட்டே யுள் தாம்,
(என்றவாறு) இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.
1100

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

When eye to answering eye reveals the tale of love,
All words that lips can say must useless prove.

கண்களோடு கண்கள்‌ நோக்கால்‌ ஒத்திருந்து அன்பு செய்யுமானால்‌ வாய்ச்சொற்கள்‌ என்ன பயனும்‌ இல்லாமற்‌ போகின்றன.

The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes(of lovers).

பரிமேலழகர் உரை இதுவும் அது. கண்ணோடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச் சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.
விளக்கம்:
(நோக்கால் ஒத்தல்; காதல் நோக்கினவாதல். வாய்ச்சொற்கள்; மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக் குமாயின், வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒருபயனுமுடையவல்ல,
(என்றவாறு). இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.


transliteration

irunokku ivalunkan ullathu orunokku
noinokkon randhnoi marundhthu

kankalavu kolluchiirunokkam kaamaththil sempaakam
sempaakam anru paerithu

nokkinaal nokki iraichinaal akhthaval
yaappinul attiya neer

yaannokkum kaalai nilannokkum nokkaakkaal
thaannokki maella nakum

kurikkondu nokkaamai allaal orukachiirakkaniththaal
orukachiirakkaniththaal pola nakuma

uraaa thavarpol solinum seraaarsol
ollai unarap padum

seraaachiirusollum setrraarpol nokkum uraaarponru
uraaarponru utrraar kurippu

asaiyiyatrku untaantohr yaeyeryaan nokkap
pasaiyinal paiya nakum

yaethilaar polap pothunokku nokkuthal
kaathalaar kannae ula

kannodu kaninai nokkokkin vaaichsotrkal
yenna payanum ila