பெருமை
Greatness 98
971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்
The light of life is mental energy; disgrace is his
Who says, ‘I ‘ill lead a happy life devoid of this.’
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணுதலாம்.
One’s light is the abundance of one’s courage; one’s darkness is the desire to live destitute of such (a state of mind.)
பரிமேலழகர் உரை
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இனி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல்.விளக்கம்:
(ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. "ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்வான்" [நாலடி. செல்வம் நிலையாமை. 9] என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்' [குறள். 26] என்றாராயினும், ஈண்டு அவை அளவிறந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு, "உள்ள வெறுக்கை" என்றும், அதுதன்னையே அதன் காரியமாகிய ஒளி ஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
பெருமையாவது சிறியார் செயல் செய்யாமை. அது பின்பு காணப்படும். (இதன் பொருள்) ஒருவனுக்கு இனப்பெருமை புகழாம்; அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்,(என்றவாறு). இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.
972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
பரிமேலழகர் உரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.விளக்கம்:
(வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய் அளவிறந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை; ஆயினும், தான் செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது . எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்
The men of lofty line, whose souls are mean, are never great
The men of lowly birth, when high of soul, are not of low estate.
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.
பரிமேலழகர் உரை
மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார்; கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் - அவை செய்து பெரியராயினார், தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார்.விளக்கம்:
(மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமைமாத்திரத்தானும் செல்வமாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) மேலான இடத்திருந்தாலும், மேன்பையில்லாதார் மேன்மக்களா கார்; கீழான இடத்திருந்தாலும், கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார்,(என்றவாறு). இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.
974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
Even greatness, like a woman’s chastity, belongs only to him who guards himself.
பரிமேலழகர் உரை
ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.விளக்கம்:
(பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) கவரா மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம் மைத் தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல, பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத் தான் காத்துக்கொண்டொழுகுவானாயின், அவன்கண் உண்டாம்,(என்றவாறு).
975
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்
The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.
பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
பரிமேலழகர் உரை
பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர்.விளக்கம்:
('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை' உடையவர் என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பெருமையுடையவர் நெறியினானே செய்ய வல்லர் ; செய்தற்கு அருமையுடைய செயல்களை,(என்றவாறு). இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.
976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு
‘As votaries of the truly great we will ourselves enroll,’
Is thought that enters not the mind of men of little soul.
பெரியோரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
பரிமேலழகர் உரை
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப் பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினையாம் கோடும் என்னும் கரத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது.விளக்கம்:
(குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமையுடை யாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து,(என்றவாறு). இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.
977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்
Whene’er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.
சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை உடையதாகும்.
Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
பரிமேலழகர் உரை
சிறப்புத் தானும் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண் படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின். இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.விளக்கம்:
(தருக்கினை மிகச் செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) செல்வமான து தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின் தொழிலை உடைத்தால்,(என்றவாறு). சீரல்லவர் - பெரியரல்லர்.
978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால் சிறுமையோ தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.
The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
பரிமேலழகர் உரை
பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமைவிளக்கம்:
(என்றும்) தன்னை வியந்து அணியும்-மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர்.
விளக்கம்:
(பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்படடன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை' (குறள். 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. 'ஆம்' என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக் கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்; சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும்,(என்றவாறு). இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று
979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.
பெருமைப் பண்பாவது செருக்கு இல்லாமல் வாழ்தல்: சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of)meanness.
பரிமேலழகர் உரை
பெருமை பெருமிதம இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக் கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல்,விளக்கம்:
('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பெருமையாவது செருக்கின்மை ; சிறுமை செருக்கினை மேற் கொண்டொழுகுமாதலான்,(என்றவாறு). மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென் றார் இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச் செருக்கின்மை பெருமையென்று கூறினார்.
980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
Greatness will hide a neighbour’s shame;
Meanness his faults to all the world proclaim.
பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
The great hide the faults of others; the base only divulge them.
பரிமேலழகர் உரை
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார்.விளக்கம்:
(மறைத்தலும் கூறலும ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகு பெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும் ; சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லி விடும்,(என்றவாறு). இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.
transliteration
olioruvatrku ulla vaerukkai ilioruvatrku
akhthirandhthu vaalthum yenal
pirappokkum yellaa uyirkkuchiirappovvaa seitholil
seitholil vaetrrumai yaan
maelirundhthum maelallaar maelallar keelirundhthum
keelallaar keelal lavar
orumai makalirae polap paerumaiyum
thannaiththaan kondolukin undu
paerumai yutaiyavar aatrruvaar aatrrin
arumai utaiya seyal
siriyaar unarchiyul illai paeriyaaraip
paenikkol vaemyennum nokku
irappae purindhtha tholitrraachiirappundhthaan seeral
seeral lavarkan patin
paniyumaam yenrum paerumai sirumai
aniyumaam thannai viyandhthu
paerumai paerumitham inmai sirumai
paerumitham oorndhthu vidal
atrram maraikkum paerumai sirumaithaan
kutrramae koori vidum