புல்லறிவாண்மை
Ignorance 85
841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
Want of knowledge, ‘mid all wants the sorest want we deem;
Want of other things the world will not as want esteem.
அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
பரிமேலழகர் உரை
இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை;பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப் பொருள் இல்லாமையோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார்.விளக்கம்:
(அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும், நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இம்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
புல்லறிவாண்மையாவது சிற்றறிவின் இயல்பும் அதனால் வருங் குற்றமும் கூறுதல். இதுவும் பேதைமையோடொத்த இயல்பிற்றாதலான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை ; பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்; அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேரு மாதலான், (எ-று).842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
The gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver’s penance bought.
அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver’s merit (in a former birth).
பரிமேலழகர் உரை
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே; வேறொன்றும் இல்லை.விளக்கம்:
(ஒரோவழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இன்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன.இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) அறிவில்லாதான் மனங்குளிர்ந்து கொடுத்தற்குக் காரணம் வேறொன்றும் இல்லை; அது பொருளைப் பெறுகின்றவனது நல்வினைப்பயன். இது கொடுத்தானாயினும் வரிசையறியாது கொடுக்குமாதலின், அது புல்லறி வென்றது.843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
With keener anguish foolish men their own hearts wring,
Than aught that even malice of their foes can bring.
அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்.
The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.
பரிமேலழகர் உரை
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது.விளக்கம்:
(பகைவர் தாம் அறிந்த தொன்றனைக் காலம் பார்த்திருந்து செய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும் எக்காலத்தும் செய்ய மாட்டாமையின், அவர்க்கும் செய்தல் அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல் அறிவர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, பகை வர்க்கும் செய்தல் அரிது,(என்றவாறு). இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று.
844
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
What is stupidity? The arrogance that cries,
“Behold, we claim the glory of the wise.’
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.
What is called want of wisdom is the vanity which says, “We are wise”.
பரிமேலழகர் உரை
'வெண்மை எனப்படுவது யாது?' எனின், 'ஒண்மை உடையம் யாம்!' என்னும் செருக்கு. வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம்.விளக்கம்:
('வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற் காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிய வுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு,(என்றவாறு)
845
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
If men what they have never learned assume to know,
Upon their real learning’s power a doubt ‘twill throw.
அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
பரிமேலழகர் உரை
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன் கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும்.விளக்கம்:
(வல்லது என ஏழாவது இறுதிக்கண் தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ!' என்பது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாறாக மேற்கொண் டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும்,(என்றவாறு). இது கல்லாததனை மேற் கொள்ளுதல் புல்லறி வென்றது.
846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
Even to cover one’s nakedness would be folly, if (one’s) faults were not covered (by forsaking them).
பரிமேலழகர் உரை
தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம்.விளக்கம்:
(குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத் து, பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு,(என்றவாறு). எனவே, அதுவும் மறையானாயின், குற்றநாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறி வென்றது.
847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
From out his soul who lets the mystic teachings die,
Entails upon himself abiding misery.
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்.
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
பரிமேலழகர் உரை
அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும்.விளக்கம்:
('சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம்-பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி 'அருமறை சோரும்' என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) அறிவில்லாதான் அரிதாக எண்ணின் மறைப்பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றி, தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்து கொள்ளுவன்,(என்றவாறு). சோரவிடுதல் - பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க் கேடும் தானே செய்யுமென்றது.
848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
Advised, he heeds not; of himself knows nothing wise;
This man’s whole life is all one plague until he dies.
தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is aburden (to the earth) till it departs (from the body).
பரிமேலழகர் உரை
ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் -அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவு ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்.விளக்கம்:
(உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீக்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும், குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தெளியான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன். இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல் லறி வென்றது.849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
That man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows.
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself”wise in his own conceit”.
பரிமேலழகர் உரை
காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்.விளக்கம்:
(புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொளுவுதல் ஒருவாற்றானும் இயைவ தன்று என்பதாம்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) அறியாதானை அறிவிக்கப் புகுத்துமவன் தானறியான்; அவ்வறி யாதவன் தான் அறிந்த படியை அறிந்தானா யிருக்குமாதலான்,(என்றவாறு). இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.
850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
Who what the world affirms as false proclaim,
O’er all the earth receive a demon’s name.
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.
பரிமேலழகர் உரை
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் - உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத் தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்து அலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்; வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்.விளக்கம்:
(கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி 'உண்டு என்பது' என்றும், தானே வேண்டிய கூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல் வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவ தாகிய பேயென்று எண்ணப்படுவன்,(என்றவாறு). இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றால் புல்லறி வென் றது.
transliteration
arivinmai inmaiyul inmai pirithinmai
inmaiyaa vaiyaa thulaku
arivilaan naenjsuvandhthu eethal pirithiyaathum
illai paeruvaan thavam
arivilaar thaandhthammaip peelikkum peelai
seruvaarkkum seithal arithu
vaenmai yenappaduva thiyaathaenin onmai
utaiyamyaam yennum serukku
kallaatha maetrkon dolukal kachadara
vallathooum aiyam tharum
atrram maraiththalo pullarivu thamvayin
kutrram maraiyaa vali
arumarai chorum arivilaan seiyum
paerumirai thaanae thanakku
yaevavum seikalaan thaanthaeraan avvuyir
poom alavumor noi
kaanaathaan kaatduvaan thaankaanaan kaanaathaan
kantaanaam thaankanda vaaru
ulakaththaar untaenpathu illaenpaan vaiyaththu
alakaiyaa vaikkap padum