அறிவுடைமை
The Possession of Knowledge 43
421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man’s eager foes Unshaken will defy.
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.
பரிமேலழகர் உரை
அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம்; செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.விளக்கம்:
(காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல். உள்ளரண் - உள்ளாய அரண்; உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
அறிவுடைமையாவது அறிவாவது இன்னதென்பதும் அதனாலாகிய பயனும் கூறுதல். இது கல்வியும் கேள்வியுமுடையாராயினும் கேட்ட பொருளை யுள்ளவாறு உணர்ந்தறிதல் வேண்டு மாதலான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு ; பகைவரா லும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே,(என்றவாறு). இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும், பிறரால் வரும் தீமை யைக் காக்குமென்றும், அறிவினாலாம் பயன் கூறிற்று.
422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
Wisdom restrains, nor suffers mind to wander where it would;
From every evil calls it back, and guides in way of good.
மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this iswisdom.
பரிமேலழகர் உரை
சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது; தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின்நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.விளக்கம்:
(வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும், ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது சொல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக் குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமை யை நீக்கி, நன்மைப்பகுதியிலே செலுத்துவது அறிவாவது,(என்றவாறு). இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.
423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Though things diverse from divers sages’ lips we learn,
‘Tis wisdom’s part in each the true thing to discern.
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
பரிமேலழகர் உரை
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.விளக்கம்:
(குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்தி நின்றது. மெய்யாதல்: நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது; அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும், அப் பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது,(என்றவாறு). இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்ட வற்றிற் றெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.
424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
Wisdom hath use of lucid speech, words that acceptance win,
And subtle sense of other men’s discourse takes in.
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlestthought which may lie hidden in the words of others, this is wisdom.
பரிமேலழகர் உரை
தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி; பிறர்வாய் நுண் பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு.விளக்கம்:
(உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார். சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொரு ளாம்படி பிறரிசையச் சொல்லி, பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது,(என்றவாறு). இது சொற்பொருள் காண்ட லறிவென்றது,
425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு
Wisdom embraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendshipunchanged, and) not opening and closing (like the lotus flower).
பரிமேலழகர் உரை
உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையினாவது அறிவாம்.விளக்கம்:
('தழிஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. 'உலகம்' என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப் போல வேறுபடாது, கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான். எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும் இல்லது என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது ; அதனை நீர்ப்பூப்போல் மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத் துதல் அறிவு,(என்றவாறு). இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு
As dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well.
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
To live as the world lives, is wisdom.
பரிமேலழகர் உரை
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.விளக்கம்:
('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான், அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) யாதொருவாற்றா லொழுகுவது உலகம் , அதனோடு கூடத் தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது,(என்றவாறு). அறிவாவது எத்தன்மைத்து என்றார்க்கு , முற்பட்ட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
The wise are those who know beforehand what will happen; those who do not know this are theunwise.
பரிமேலழகர் உரை
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறிய வல்லார்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார்.விளக்கம்:
(முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார்' என்பதற்குத் 'தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்; அதனை யறியா தவர் அறிவில்லாதவராவர்,(என்றவாறு). இது மேற் சொல்லுவன வெல்லாம் தொகுத்துக் கூறிற்று.
428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom’s part.
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.
பரிமேலழகர் உரை
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.விளக்கம்:
(பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை: எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார், 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மை யாதல்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில், (எ.று). மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும், ஈண்டு அஞ்ச வேண்டுவன வற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
The wise with watchful soul who coming ills foresee;
From coming evil’s dreaded shock are free.
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.
பரிமேலழகர் உரை
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு; அதிர வருவது ஓர் நோய் இல்லை . அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.விளக்கம்:
('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம் இன்மை இதனான் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை,(என்றவாறு) இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின், கடிதாக வாராதென்றது.
430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
The wise is rich, with ev’ry blessing blest;
The fool is poor, of everything possessed.
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they maypossess, have nothing.
பரிமேலழகர் உரை
அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும், எல்லாம் உடையராவர்; அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.விளக்கம்:
(செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடையரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும், எல்லா முடையர் ; அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர்,(என்றவாறு). இஃது அறிவுடைமை வேண்டு மென்றது.
transliteration
arivatrrang kaakkung karuvi seruvaarkkum
ullalikka laakaa aran
senra idaththaal selavitaa theethoreei
nanrinpaal uippa tharivu
yepporul yaaryaarvaaik kaetpinum apporul
maeipporul kaanpa tharivu
yenporula vaakach selachsollith thaanpirarvaai
nunporul kaanpa tharivu
ulakam thaleeiya thotpam malarthalum
koompalum illa tharivu
yevva thuraivathu ulakam ulakaththodu
avva thuraiva tharivu
arivutaiyaar aava tharivaar arivilaar
akhthari kallaa thavar
anjsuva thanjsaamai paethaimai anjsuvathu
anjchal arivaar tholil
yethirathaak kaakkum arivinaark killai
athira varuvathor noi
arivutaiyaar yellaa mutaiyaar arivilaar
yennutaiya raenum ilar