குறள் 430

அறிவுடைமை

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

arivutaiyaar yellaa mutaiyaar arivilaar
yennutaiya raenum ilar


Shuddhananda Bharati

The possession of knowledge

Who have wisdom they are all full
Whatev'r they own, misfits are nil.


GU Pope

The Possession of Knowledge

The wise is rich, with ev'ry blessing blest;
The fool is poor, of everything possessed.

Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they maypossess, have nothing.


Mu. Varadarajan

அறிவுடையவர்‌ (வேறொன்றும்‌ இல்லாதிருப்பினும்‌) எல்லாம்‌ உடையவரே ஆவர்‌; அறிவில்லாதவர்‌ வேறு என்ன உடையவராக இருப்பினும்‌ ஒன்றும்‌ இல்லாதவரே ஆவர்‌.


Parimelalagar

அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும், எல்லாம் உடையராவர்; அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.
விளக்கம்:
(செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடையரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும், எல்லா முடையர் ; அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர்,
(என்றவாறு). இஃது அறிவுடைமை வேண்டு மென்றது.