The Possession of Benevolence 25

241

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

Wealth ‘mid wealth is wealth ‘kindliness’;
Wealth of goods the vilest too possess.

பொருள்களாகிய செல்வங்கள்‌ இழிந்தவரிடத்திலும்‌ உள்ளன; (உயர்ந்தவரிடத்தில்‌ மட்டும்‌ உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்‌ சிறந்த செல்வமாகும்‌.

The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.

பரிமேலழகர் உரை செல்வத்துள் செல்வம் அருட் செல்வம் - செல்வங்கள் பவற்றுள்ளும் ஆராய்ந் தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம்; பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள-அஃது ஒழிந்த பொருளான்வரும் செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான்.
விளக்கம்:
(அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம்: ஏனை நீசர்கண்ணும் உளவாம் பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.)
மணக்குடவர் உரை அருளுடைமையாவது யாதானுமோருயிர் இடர்ப்படின் அதற்குத் தன் னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல் வருந்தும் ஈரமுடைமை. (இதன் பொருள்) செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட் செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால், (எ-று) இஃது அருள் நிலை கூறிற்று.
242

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

The law of ‘grace’ fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.

நல்ல வழியால்‌ ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்‌. பல வழிகளால்‌ ஆராய்ந்து கண்டாலும்‌ அருளே வாழ்க்கைக்குத்‌ துணையாக உள்ளது.

(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)

பரிமேலழகர் உரை நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, 'நமக்குத்துணை யாம் அறம் யாது?' என்று ஆராய்ந்து, அருளுடையராக; பல ஆற்றான் தேரினும் துணை அஃதே-ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாம் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை.
விளக்கம்:
(அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒருஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின், மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது: 'இது கூடும், இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக; பலவழியினும் ஓடி யாராயினும், தமக்கு அவ்வருளே துணையாம்,
(என்றவாறு). 'நல்லாற்றானாடியருளாள்க' என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங் களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.
243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

They in whose breast a ‘gracious kindliness’ resides,
See not the gruesome world, where darkness drear abides.

அறியாமையாகிய இருள்‌ பொருந்திய துன்ப உலகில்‌ இருந்து வாழும்‌ வாழ்க்கை, அருள்‌ பொருந்திய நெஞ்சம்‌ உடையவர்களுக்கு இல்லை.

They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.

பரிமேலழகர் உரை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.
விளக்கம்:
('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன்கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை; அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அருளைப் பொருந்தின நெஞ்சினையுடையவர்க்கு உருளைப் பொ ருந்தின நரக லோகம் புகுதலில்லை ,
(என்றவாறு). இது நரகம் புகாரென்றது.
244

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.

தன்‌ உயிரின்‌ பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில்‌ நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப்‌ போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)

பரிமேலழகர் உரை மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல்என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.
விளக்கம்:
(உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல் துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நிலைபெற்ற உயிரை ஒம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார், (எ - று ). இது தீமை வாராதென்றது.
245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி

The teeming earth’s vast realm, round which the wild winds blow,
Is witness, men of ‘grace’ no woeful want shall know.

அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத்‌ துன்பம்‌ இல்லை: காற்று இயங்குகின்ற வளம்‌ பொருந்திய பெரிய உலகத்தில்‌ வாழ்வோரே இதற்குச்‌ சான்று ஆவர்‌.

This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.

பரிமேலழகர் உரை அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையோர்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது; வளி வழங்கும் மல்லம்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.
விளக்கம்:
(சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார், 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அருளுடையார்க்கு அல்லலில்லை; அதற்குச் சான்று காற் றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம்,
(என்றவாறு) இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார் மாட்டே காணப்படு மென்றது.
246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

Gain of true wealth oblivious they eschew,
Who ‘grace’ forsake, and graceless actions do.

அருள்‌ இல்லாதவராய்‌ அறமல்லாதவைகளைச்‌ செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித்‌ தம்‌ வாழ்க்கையின்‌ குறிக்கோளை மறந்தவர்‌ என்பர்‌.

(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)

பரிமேலழகர் உரை அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப் பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.
விளக்கம்:
('உறுதிப் பொருள்: அறம். துன்புறுதல், பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலாராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய் தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியு முடையவ ரென்று சொல்லுவர்,
(என்றவாறு). இது பொருளில்லையாமென்றது.
247

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

As to impoverished men this present world is not;
The ‘graceless’ in you world have neither part nor lot.

பொருள்‌ இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில்‌ அருள்‌ இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்‌.

As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

பரிமேலழகர் உரை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.
விளக்கம்:
('அவ்வுலகம்' 'இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல, அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை ; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சியில்லையானாற்போல், (எ-று). இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
248

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose ‘benevolence’, lose all; nothing can change their doom.

பொருள்‌ இல்லாதவர்‌ ஒரு காலத்தில்‌ வளம்‌ பெற்று விளங்குவர்‌; அருள்‌ இல்லாதவர்‌ வாழ்க்கையின்‌ பயன்‌ அற்றவரே; அவர்‌ ஒரு காலத்திலும்‌ சிறந்து விளங்குதல்‌ இல்லை.

Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.

பரிமேலழகர் உரை பொருள் அற்றார் ஒருகால் பூப்பர் - ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர்; அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது-அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒரு காலத்தும் ஆதல் இல்லை.
விளக்கம்:
('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும் : அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது,
(என்றவாறு). இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டா மென்றது.
249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

When souls unwise true wisdom’s mystic vision see,
The ‘graceless’ man may work true works of charity.

அருள்‌ மேற்கொள்ளாதவன்‌ செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால்‌, அஃது அறிவு தெளியாதவன்‌ ஒரு நூலின்‌ உண்மைப்‌ பொருளைக்‌ கண்டாற்‌ போன்றது.

If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

பரிமேலழகர் உரை அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின்; தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.
விளக்கம்:
(மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப் பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்து விடும்; அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்துவிடும் என்பது ஆயிற்று; ஆகவே, பிற அறங்கட்கெல்‘ம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்க வரும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற் போலும் ; ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும்,
(என்றவாறு). இஃது அறஞ்செய்யவும் மாட்டாரென்றது,
250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து

When weaker men you front with threat’ning brow,
Think how you felt in presence of some stronger foe.

(அருள்‌ இல்லாதவன்‌) தன்னைவிட மெலிந்தவர்மேல்‌ துன்புறுத்தச்‌ செல்லும்போது, தன்னைவிட வலியவரின்‌ முன்‌ தான்‌ அஞ்சி நிற்கும்‌ நிலைமையை நினைக்க வேண்டும்‌.

When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.

பரிமேலழகர் உரை வலியார் முன் தன்னை நினைக்க-தன்னில் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சி நிற்கும் நிலையினை நினைக்க; தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து-அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது.
விளக்கம்:
('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறினையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, 'இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம்' என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை {இ - ள்.) தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்து, தம்மின் வலியார் முன் தாம் நிற்குநிலையை நினைக்க,
(என்றவாறு).


transliteration

arutselvam selvaththul selvam porutselvam
pooriyaar kannum ula

nallaatrraal naati arulaalka pallaatrraal
thaerinum akhthae thunai

arulsaerndhtha naechinaark killai irulsaerndhtha
innaa ulakam pukal

mannuyir oampi arulaalvaarkku illaenpa
thannuyir anjsum vinai

allal arulaalvaarkku illai valivalangkum
mallanmaa gnyaalang kari

porulneengkip pochsaandhthaar yenpar arulneengki
allavai seitholuku vaar

arulillaarkku avvulakam illai porulillaarkku
ivvulakam illaaki yaangku

porulatrraar pooppar orukaal arulatrraar
atrraarmatr raathal arithu

thaerulaathaan maeipporul kandatrraal thaerin
arulaathaan seiyum aram

valiyaarmun thannai ninaikkathaan thannin
maeliyaarmael sellu midaththu