குறள் 242

அருளுடைமை

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

nallaatrraal naati arulaalka pallaatrraal
thaerinum akhthae thunai


Shuddhananda Bharati

Compassion

Seek by sound ways good compassion;
All faiths mark that for-salvation.


GU Pope

The Possession of Benevolence

The law of 'grace' fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.

(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)


Mu. Varadarajan

நல்ல வழியால்‌ ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்‌. பல வழிகளால்‌ ஆராய்ந்து கண்டாலும்‌ அருளே வாழ்க்கைக்குத்‌ துணையாக உள்ளது.


Parimelalagar

நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, 'நமக்குத்துணை யாம் அறம் யாது?' என்று ஆராய்ந்து, அருளுடையராக; பல ஆற்றான் தேரினும் துணை அஃதே-ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாம் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை.
விளக்கம்:
(அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒருஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின், மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது: 'இது கூடும், இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக; பலவழியினும் ஓடி யாராயினும், தமக்கு அவ்வருளே துணையாம்,
(என்றவாறு). 'நல்லாற்றானாடியருளாள்க' என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங் களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.