Military Spirit 78

771

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்

Ye foes! stand not before my lord! for many a one
Who did my lord withstand, now stands in stone!

பகைவரே! என்னுடைய தலைவன்முன்‌ எதிர்த்து நிற்காதீர்கள்‌; என்னுடைய தலைவன்முன்‌ எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய்‌ நின்றவர்‌ பலர்‌.

O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in theshape of) statues.

பரிமேலழகர் உரை தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர்-பகைவீர், இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின்-நீவிர் அதன்கணின்றி நும் உடற் கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின்.
விளக்கம்:
('என் ஐ' எனத் தன்னோடு தொடர்பு படுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல்-நடுகல். ''நம்பன் சிலை வாய் நடக்குங்கணை மிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை [சீவக காந்தருவ. 317] எனப் பதுமுகன் கூறினாற் போல, ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி' [பு.வெ.மா.வஞ்சி. 1
மணக்குடவர் உரை படைச்செருக்காவது படையினது வீரியங் கூறுதல். இது படைக்கு இன்றியமை-யாமையின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லா தொழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே யெழுத்தப்பட்டு நிற்கின்றார் பலராத லால்,
(என்றவாறு). இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் மென்றது.
772

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

Who aims at elephant, though dart should fail, has greater praise.
Than he who woodland hare with winged arrow slays.

காட்டில்‌ ஓடும்‌ முயலை நோக்கிக்‌ குறிதவறாமல்‌ எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில்‌ நின்ற யானை மேல்‌ எறிந்து தவறிய வேலை ஏந்துதல்‌ சிறந்தது.

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in theforest.

பரிமேலழகர் உரை கான முயல் எய்த அம்பினில்-கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று
விளக்கம்:
('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்பதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக் குத்தக எறிதலம் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் சொல்லுற்றானது கூற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானை யைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது,
(என்றவாறு). இது மேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
773

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு

Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes.

பகைவரை எதிர்க்கும்‌ வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்‌; ஒரு துன்பம்‌ வந்தபோது பகைவர்க்கும்‌ உதவி செய்தலை அந்த ஆண்மையின்‌ கூர்மை என்று கூறுவர்‌.

The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become abenefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

பரிமேலழகர் உரை தறுகண் பேராண்மை என்ப-பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு [என்ப]-அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.
விளக்கம்:
('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை-உபகாரியாம் தன்மை. அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின் தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி. [பு.வெ.மா. வஞ்சி. 3])
மணக்குடவர் உரை (உள்.) ஒன்று உற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மை யென்று சொல்லுவர்; உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக் கலமென்று சொல்லுவர்,
(என்றவாறு) உலகியலறிவது - தான் உலகியலை வெளியார் சொல்லாமை யறிதல்.
774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

At elephant he hurls the dart in hand; for weapon pressed,
He laughs and plucks the javelin from his wounded breast.

கையில்‌ ஏந்திய வேலை ஒரு யானையின்‌ மேல்‌ எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல்‌ தேடி வருகின்றவன்‌ தன்‌ மார்பில்பட்டிருந்த வேலைக்‌ கண்டு பறித்து மகிழ்கின்றான்‌.

The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) willpluck the one (that sticks) in his body and laugh (exultingly).

பரிமேலழகர் உரை கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்-கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும்-தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும்.
விளக்கம்:
(களிற்றோடு போக்கல்-களிய்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றை யல்லது எறியான் என்பதூஉம், சின மிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. [பு.வெ.மா. தும்பை. 16])
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன், தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித் துக் கருவி பெற்றே மென்று மகிழும்,
(என்றவாறு). இது வீரர் செயல் இத்தன்மையதாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும் என்றது.
775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு

To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear.

பகைவரைச்‌ சினந்து நோக்கிய கண்‌, அவர்‌ வேலைக்‌ கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும்‌, அது வீரமுடையவர்க்குத்‌ தோல்வி அன்றோ?

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them(by their foe) ?

பரிமேலழகர் உரை விழித்த கண்-பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ- அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம்.
விளக்கம்:
(அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின், அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும்,
(என்றவாறு). விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.
776

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து

The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain.

வீரன்‌ கழிந்த தன்‌ நாட்களைக்‌ கணக்கிட்டு விழுப்புண்‌ படாத நாட்களை எல்லாம்‌ பயன்படாமல்‌ தவறிய நாட்களுள்‌ சேர்ப்பான்‌.

The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

பரிமேலழகர் உரை தன் நாளை எடுத்து-தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும்-அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன்,
விளக்கம்:
(விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனது வாழ்நாளாகியநாளை யெண்ணி, அவற்றுள் விழுமிய புண் படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன். () இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகு புறங் கொடாமையும் வேண்டு மென்றது.
777

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து

Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife.

பரந்து நிற்கும்‌ புகழை விரும்பி, உயிர்வாழ்வையும்‌ விரும்பாத வீரர்‌, வீரக்‌ கழலைக்‌ காலில்‌ கட்டிக்‌ கொள்ளுதல்‌ அழகு செய்யும்‌ தன்மையுடையதாகும்‌.

The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) theirlives is like adorning (themselves).

பரிமேலழகர் உரை சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்-துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக் காரிகை நீர்த்து-கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து.
விளக்கம்:
('வையத்தைச் சூழும்' எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல்- அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பரவும் புகழை விரும்பி உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து,
(என்றவாறு). இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.
778

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்

Fearless they rush where’er ‘the tide of battle rolls’;
The king’s reproof damps not the ardour of their eager souls.

போர்‌ வந்தாலும்‌ உயிரின்‌ பொருட்டு அஞ்சாமல்‌ போர்‌ செய்யத்‌ துணியும்‌ வீரர்‌, அரசன்‌ சினந்தாலும்‌ தம்முடைய சிறப்புக்‌ குன்றாதவர்‌ ஆவார்‌.

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if theking prohibits (their fighting).

பரிமேலழகர் உரை உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இவர்-தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார்.
விளக்கம்:
(போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்" [புறநா. 31] என்றும், "புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம்யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" [புறா. 68] என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தமமரச னால் செறுக்கப்பட்டாராயினும், தமது தன்மை குன்றுதல் இலர்,
(என்றவாறு). இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.
779

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்

Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they’ve sworn?

தாம்‌ உரைத்த சூள்‌ தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர்‌ செய்த பிழைக்காகத்‌ தண்டிக்க வல்லவர்‌ யார்‌?

Who would reproach with failure those who seal their oath with their death ?

பரிமேலழகர் உரை இழைத்தது இகவாமைச் சாவாரை-தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார்-அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்?
விளக்கம்:
(இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னானாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்' என்பது அவாய் நிலையான் வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற் சிறப்பு கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல் லிப் பழிக்கவல்லவர் யாவர்,
(என்றவாறு). இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.
780

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து

If monarch’s eyes o’erflow with tears for hero slain,
Who would not beg such boon of glorious death to gain?

தம்மைக்‌ காத்த தலைவருடைய கண்கள்‌ நீர்‌ பெருக்குமாறு சாகப்‌ பெற்றால்‌, சாவு இரந்தாவது பெற்றுக்‌ கொள்ளத்‌ தக்க பெருமை உடையதாகும்‌.

If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtainedeven by begging.

பரிமேலழகர் உரை புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து.
விளக்கம்:
(மல்குதலாகிய இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளிவார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால், துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாகவல்லாராயின், அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதியுடைத்து,
(என்றவாறு). இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது. பொருளியல் முற்றிற்று.


transliteration

yennaimun nillanmin thaevvir palaraennai
munninru kalnin ravar

kaana muyalaeitha ampinil yaanai
pilaiththavael yaendhthal inithu

paeraanmai yenpa tharukanon rutrrakkaal
ooraanmai matrrathan yekhku

kaivael kalitrrodu pokki varupavan
maeivael pariyaa nakum

viliththakan vaelkon taeriya aliththimaippin
otdanno vanka navarkku

viluppun pataathanaal yellaam valukkinul
vaikkumthan naalai yeduththu

sulalum isaivaenti vaentaa uyiraar
kalalyaappuk kaarikai neerththu

urinuyir anjsaa maravar iraivan
serinum seerkunral ilar

ilaiththathu ikavaamaich saavaarai yaarae
pilaiththathu orukkitr pavar

purandhthaarkan neermalkach saakitrpin saakkaadu
irandhthukoal thakkathu utaiththu