வாய்மை
Veracity 30
291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
You ask, in lips of men what ‘truth’ may be;
‘Tis speech from every taint of evil free.
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
பரிமேலழகர் உரை
வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின்; தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.விளக்கம்:
('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அதுதானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்; பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை
வாய்மையாவது பொய் சொல்லாமை. (இதன் பொருள்) பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல். வாய்மை யாது என்றார்க்கு , இது கூறப்பட்டது.292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.
குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம்.
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
பரிமேலழகர் உரை
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்; பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பாலஆம்.விளக்கம்:
(குற்றம் தீர்ந்த நன்மை: அறம்; அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல் நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம்; பயப்பின், மெய்ம்மையாம் என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை' எனவும், 'நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பொய்யும் மெய்யோ டொக்கும் ; குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்,(என்றவாறு).
293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one’s spirit glows.
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
பரிமேலழகர் உரை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.விளக்கம்:
(நெஞ்சு கரியாதல் "கண்டவர இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித். நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) தன்னெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக ; பொய்ப்பனா யின், தன்னெஞ்சு தானே தன்னை யொறுக்கும்,(என்றவாறு). சுடுதலாவது அதனாற் பிறர்க்கு உளதாகுந் தீமையைக் கண்டு என் செய் தோம் யாமென்று வருந்துவித்தல். இது பொய்யாமை வேண்டு மென்றது.
294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
பரிமேலழகர் உரை
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். 'உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம்.விளக்கம்:
(பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல். அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின், உலகத் தார் நெஞ்சினு ளெல்லாம் உளனாவன்,(என்றவாறு). இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவரென்றது.
295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை
Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.
ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால், அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன்.
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
பரிமேலழகர் உரை
மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்; தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன்.விளக்கம்:
(மனத்தொடு பொருந்துதல்-மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) மனத்தோடே கூட மெய் சொல்லுவனாயின், தவத்தோடே கூடத் தானஞ் செய்வாரில் தலையாவான்,(என்றவாறு) இஃது எல்லா நன்மையும் பயக்கு மென்றது.
296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.
ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற புகழ்நிலை வேறொன்றும் இல்லை; அஃது அவன் அறியாமலே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.
பரிமேலழகர் உரை
பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும் தானே கொடுக்கும்.விளக்கம்:
('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லறத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேண்டுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார். 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன் றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்,(என்றவாறு).
297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
If all your life be utter truth, the truth alone,
‘Tis well, though other virtuous acts be left undone.
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
பரிமேலழகர் உரை
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே பொய்யாமையையே செய்ய வல்லனாயின்; பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று.விளக்கம்:
(அடுக்கு இரண்டனுள்; முதலது இடைவிடாமை மேற்று; ஏனையது துணிவின்மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று,' என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார். இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று,' எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிறர் அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப் பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின், பிற அறங் களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்,(என்றவாறு)
298
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
Purity of body is produced by water and purity of mind by truthfulness.
பரிமேலழகர் உரை
புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும் - அது போல, மனம் தூய்தாந்தான்மை வாய்மையான் உண்டாம்.விளக்கம்:
(காணப்படுவது உள்ளதாகலின், 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்; மனம் தூய்தாதல் மெய்யுணர்தல், புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும் என்பதூஉம் பெற்றாம்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும் ; மனத்தின் தூய்மை மெய் சொல்லுதலினாலே யறியப்படும்,(என்றவாறு).
299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
Every lamp is not a lamp in wise men’s sight;
That’s the lamp with truth’s pure radiance bright.
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும், பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
பரிமேலழகர் உரை
எல்லா விளக்கும் விளக்குஅல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா; சான்றோர்க்கு விளக்குப் பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.விளக்கம்:
(உலகத்தார் விளக்காவன: ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும்
விளக்கம்:
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளி யல்ல ; பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும்,(என்றவாறு). இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.
300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
Of all good things we’ve scanned with studious care,
There’s nought that can with truthfulness compare.
யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத் தக்கவை வேறு இல்லை.
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.
பரிமேலழகர் உரை
யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்; எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.விளக்கம்:
(மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன; தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லாராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற்பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) யாம் மெய்யாகக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல் போல நன்றா யிருப்பன், வேறு யாதொன்றும் இல்லை,(என்றவாறு) இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.
transliteration
vaaimai yenappaduvathu yaathaenin yaathonrum
theemai ilaatha solal
poimaiyum vaaimai yidaththa puraitheerndhtha
nanmai payakkum yenin
thannaenj charivathu poiyatrka poiththapin
thannaenjsae thannaich sudum
ullaththaatr poiyaa tholukin ulakaththaar
ullaththu laellaam ulan
manaththodu vaaimai moliyin thavaththodu
thaananjsei vaarin thalai
poiyaamai anna pukalillai yeiyaamai
yellaa aramundh tharum
poiyaamai poiyaamai aatrrin arampira
seiyaamai seiyaamai nanru
purandhthooimai neeraan amaiyum akandhthooimai
vaaimaiyaal kaanap padum
yellaa vilakkum vilakkalla saannorkkup
poiyaa vilakkae vilakku
yaamaeiyaak kandavatrrul illai yenaiththonrum
vaaimaiyin nalla pira