குறள் 297

வாய்மை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

poiyaamai poiyaamai aatrrin arampira
seiyaamai seiyaamai nanru


Shuddhananda Bharati

Veracity

Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.


GU Pope

Veracity

If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.

If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.


Mu. Varadarajan

பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால்‌ மற்ற அறங்களைச்‌ செய்தலும்‌ நல்லது ஆகும்‌.


Parimelalagar

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே பொய்யாமையையே செய்ய வல்லனாயின்; பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று.
விளக்கம்:
(அடுக்கு இரண்டனுள்; முதலது இடைவிடாமை மேற்று; ஏனையது துணிவின்மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று,' என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார். இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று,' எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிறர் அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப் பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின், பிற அறங் களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்,
(என்றவாறு)