Avoiding mean Associations 46

451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear.

பெரியோரின்‌ இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்‌; சிறியோரின்‌ இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்‌ தழுவிக்‌ கொள்ளும்‌.

(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them asfriends.

பரிமேலழகர் உரை பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.
விளக்கம்:
(தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு ஆகாது' என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை சிற்றினஞ் சேராமையாவது காமுகரையும் சூதாடிகளையும் பெண்டிர் முத லாயினோரையும் சேர்ந்தொழுகினால் வருங்குற்றமும் சேராமையால் வரும் நன் மையும் கூறுதல். பெரியார் துணையாயினாலும் சிறியாரினத்தாரோடு ஒழுகின் , அது தீமை பயக்கு மென்று அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்,
(என்றவாறு). இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.
452

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

The waters’ virtues change with soil through which they flow;
As man’s companionship so will his wisdom show.

சேர்ந்த நிலத்தின்‌ இயல்பால்‌ நீர்‌ வேறுபட்டு அந்நிலத்தின்‌ தன்மையுடையதாகும்‌; அது போல்‌ மக்களுடைய அறிவு இனத்தின்‌ இயல்பினை உடையதாகும்‌

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character ofmen resemble that of their associates.

பரிமேலழகர் உரை
விளக்கம்:
(எடுத்துக்காட்டு உவமை. விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிற இனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந் நிலத் தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறு படும்,
(என்றவாறு).
453

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்

Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known.

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால்‌ ஏற்படும்‌; இப்படிப்பட்டவன்‌ என்று உலகத்தாரால்‌ மதிக்கப்படும்‌ சொல்‌ சேர்ந்த இனத்தால்‌ ஏற்படும்‌.

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.

பரிமேலழகர் உரை மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்; இன்னான் எனப்படும்சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல்இனம் காரணமாக உண்டாம்.
விளக்கம்:
(இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தான் ஆம்' என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது. 'அத் திரிபும் மனத்தான் ஆம்' என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம் ; ஆயினும், தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம்,
(என்றவாறு). இது பிறரால் பழிக்கப்படுமென்றது.
454

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

Man’s wisdom seems the offspring of his mind;
‘Tis outcome of companionship we find.

ஒருவனுக்குச்‌ சிறப்பறிவு மனத்தில்‌ உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும்‌ போது) அவன்‌ சேர்ந்த இனத்தில்‌ உள்ளதாகும்‌.

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

பரிமேலழகர் உரை அறிவு - அவ் விசேட உணர்வு; ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம்.
விளக்கம்:
(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும், பின் நோக்கிய வழிப் பயின்ற இனத்துளதாயும் இருத்தலின், 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது?' என்பாரை நோக்கி, ஆண்டுப் புலப்படும் துணையே உள்ளது; அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப், பின்பு தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்,
(என்றவாறு).
455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near.

மனத்தின்‌ தூய்மை, செய்யும்‌ செயலின்‌ தூய்மை ஆகிய இவ்விரண்டும்‌ சேர்ந்த இனத்தின்‌ தூய்மையைப்‌ பொறுத்தே ஏற்படும்‌.

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity ofconduct.

பரிமேலழகர் உரை மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - (அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய) மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரம் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.
விளக்கம்:
(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் "தூவறத் துறந்தாரை" (கலித். நெய்த. 1) என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான் இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய விரண்டும் இனம் நன்றாதலைப் பற்றி வரும்,
(என்றவாறு). இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.
456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை

From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds.

மனம்‌ தூய்மையாகப்‌ பெற்றவர்க்கு அவர்க்குப்பின்‌ எஞ்சி நிற்கும்‌ புகழ்‌ முதலியவை நன்மையாகும்‌. இனம்‌ தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்‌ இல்லை.

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds willbe done that are not good.

பரிமேலழகர் உரை மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் . மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
விளக்கம்:
(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம், நன்று ஆகும்' என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காண முதலான பொருள்கள் நல்லவாம்; இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை,
(என்றவாறு). இது மேலதற்குப் பயன் கூறிற்று.
457

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்

Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.

மனத்தின்‌ நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்‌; இனத்தின்‌ நன்மை (அவ்வளவோடு நிற்காமல்‌) எல்லாப்‌ புகழையும்‌ கொடுக்கும்‌.

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

பரிமேலழகர் உரை மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் (தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
விளக்கம்:
('மன் உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச்சொல் முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும், புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார். மேல் 'மனநன்மை இனநன்மை பற்றி வரும்,' என்பதனை உட்கொண்டு, அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என, அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனநன்மை நிலை பெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல், இன் நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்,
(என்றவாறு) இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.
458

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து

To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.

மனத்தின்‌ நன்மையை உறுதியாக உடையவராயினும்‌ சான்றோர்க்கு இனத்தின்‌ நன்மை மேலும்‌ நல்ல காவலாக அமைவதாகும்‌.

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthenit.

பரிமேலழகர் உரை மனநலம் நன்கு உடையராயினும் - மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து.
விளக்கம்:
('நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும் மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மன நன்மை மிக வுடையராயினும், இன நன்மையுடைமை சான் றோர்க்குக் காவலாதலையுடைத்து,
(என்றவாறு) இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான், இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.
459

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து

Although to mental goodness joys of other life belong,
Yet good companionship is confirmation strong.

மனத்தின்‌ நன்மையால்‌ மறுமை இன்பம்‌ உண்டாகும்‌; அதுவும்‌ இனத்தின்‌ நன்மையால்‌ மேலும்‌ சிறப்புடையதாகும்‌.

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society ofthe good.

பரிமேலழகர் உரை மனநலத்தின் மறுமை ஆகும் - ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்ற அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து - அதற்கு அச் சிறப்புத்தானும் இன நன்மையான் வலி பெறுதலை உடைத்து.
விளக்கம்:
(மனநலத்தின் ஆகும் மறுமை' என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று', என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று - வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான மனநலம் திரியினும், நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும்; அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.
460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்

Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.

நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than thecompany of the wicked.

பரிமேலழகர் உரை நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை; தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
விளக்கம்:
(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை; தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை,
(என்றவாறு). இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.


transliteration

sitrrinam anjsum paerumai sirumaithaan
sutrramaach koolndhthu vidum

nilaththiyalpaal neerthirindh thatrraakum maandhtharkku
inaththiyalpa thaakum arivu

manaththaanaam maandhthark kunarchi inaththaanaam
innaan yenappadunj sol

manaththu lathupolak kaatti oruvatrku
inaththula thaakum arivu

manandhthooimai seivinai thooimai irandum
inandhthooimai thoovaa varum

manandhthooyaark kechchamnan raakum inandhthooyaarkku
illainan raakaa vinai

mananalam mannuyirk kaakkam inanalam
yellaap pukalum tharum

mananalam nankutaiya raayinum saannorkku
inanalam yaemaap putaiththu

mananalaththin aakum marumaimatr rakhthum
inanalaththin yaemaap putaiththu

nallinaththi noongkundh thunaiyillai theeyinaththin
allatr paduppathooum il