குறள் 891

பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

aatrruvaar aatrral ikalaamai potrruvaar
potrralul yellaam thalai


Shuddhananda Bharati

Offend not the great

Not to spite the mighty ones
Safest safeguard to living brings.


GU Pope

Not Offending the Great

The chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will.

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).


Mu. Varadarajan

மேற்கொண்ட செயலைச்‌ செய்து முடிக்க வல்லவரின்‌ ஆற்றலை இகழாதிருத்தல்‌, காப்பவர்‌ செய்து கொள்ளும்‌ காவல்‌ எல்லாவற்றிலும்‌ சிறந்தது.


Parimelalagar

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக் கொண்டனயாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண்தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது.
விளக்கம்:
(ஆற்றல் என்பது பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும்; அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொது வகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)


Manakkudavar

பெரியாரைப் பிழையாமையாவது தம்மிற் பெரிய அரசரையும், முனிவரை யும், அறிஞரையும் பிழைத்தொழுகாமை. மேல் பகையும் பகையின்கண் செய்யும் திறமும் கூறினார். தம்மிற் பெரியார் தம்மைப் பகையாகக் கொள்ளா ராயினும், தமது இகழ்ச்சி அவரால் தீமை பயக்குமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழா தொழி தல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.