குறள் 82

விருந்தோம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று

virundhthu puraththathaath thaanundal saavaa
marundhthaeninum vaentaatrpaatr ranru


Shuddhananda Bharati

Hospitality

To keep out guests cannot be good
Albeit you eat nectar-like food.


GU Pope

Cherishing Guests

Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.

It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.


Mu. Varadarajan

விருந்தினராக வந்தவர்‌ வீட்டின்‌ புறத்தே இருக்கத்‌ தான்‌ மட்டும்‌ உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும்‌ அது விரும்பத்தக்கது அன்று.


Parimelalagar

சாவா மருந்து எனினும் உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும்; விருந்து புறத்ததாத் தானுண்டல்-தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று-விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
விளக்கம்:
(சாவா மருந்து: சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றயே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும். அதனை ஒழிக,' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதியுடைத்தன்று,
(என்றவாறு).