குறள் 703

குறிப்பறிதல்

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்

kurippitr kurippunar vaarai uruppinul
yaathu koduththum kolal


Shuddhananda Bharati

Divining the mind

By sign who scans the sign admit
At any cost in cabinet.


GU Pope

The Knowledge of Indications

Who by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain.

The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.


Mu. Varadarajan

(முகம்‌ கண்‌ இவற்றின்‌) குறிப்புக்களால்‌ உள்ளக்‌ குறிப்பை உணர வல்லவரை நாட்டின்‌ உறுப்புக்களுள்‌ எதைக்‌ கொடுத்தாவ ணையாகப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

குறிப்பின் குறிப்பு உணர்வாரை-தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்-அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க.
விளக்கம்:
(உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று. உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக் குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை , உறுப் பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க,
(என்றவாறு). உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.