குறள் 701

குறிப்பறிதல்

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

kooraamai nokkik kuripparivaan yenjgnyaanrum
maaraaneer vaiyak kani


Shuddhananda Bharati

Divining the mind

Who reads the mind by look, untold
Adorns the changeless sea-girt world.


GU Pope

The Knowledge of Indications

Who knows the sign, and reads unuttered thought, the gem is he,
Of earth round traversed by the changeless sea.

The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.


Mu. Varadarajan

ஒருவர்‌ சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர்‌ கருதிய குறிப்பை அறிகின்றவன்‌ எப்போதும்‌ உலகத்திற்கு ஓர்‌ அணிகலன்‌ ஆவான்‌.


Parimelalagar

குறிப்பு கூறாமை நோக்கி அறிவான்-அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி-எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்
விளக்கம்:
(ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான். 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.)


Manakkudavar

குறிப்பறிதலாவது அரசர் உள்ளக் கருத்தை அமைச்சர் அறிதல். இஃது அமைச்சியலாதலின் அமைச்சர் குறிப்பறிதல் கூறிய தென்னையெனின், குறிப் பறிதல் அரசர்க்கும் வேண்டுமாதலின், இறந்தது காத்தலென்னுந் தந்திரத்தியாற் கூறப்பட்ட தென்க. இது பெரும்பான்மையும் அரசர்க்கும் வேண்டுமாதலின், மன்னரைச் சேர்ந்தொழுகலின் பின் கூறப்பட்டது, (இதன் பொருள்) அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன் முன்னே நோக்கி அறியுமவன், எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவன். இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.