குறள் 697

மன்னரைச் சேர்ந்தொழுதல்

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

vaetpana solli vinaiyila yenjgnyaanrum
kaetpinum sollaa vidal


Shuddhananda Bharati

Walk with kings

Tell pleasing things; and never tell
Even if pressed what is futile.


GU Pope

Conduct in the Presence of the King

Speak pleasant things, but never utter idle word;
Not though by monarch's ears with pleasure heard.

Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions,though requested (to do so).


Mu. Varadarajan

அரசர்‌ விரும்புகின்றவற்றை மட்டும்‌ சொல்லிப்‌ பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும்‌ எப்போதும்‌ சொல்லாமல்‌ விட வேண்டும்‌.


Parimelalagar

வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.
விளக்கம்:
['வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும், வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.]


Manakkudavar

(இ ள்.) எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லி, தமக்குப் பயன்படாதனவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக,
(என்றவாறு). சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப்படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினாவினால், நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.