குறள் 642

சொல்வன்மை

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

aakkamung kaedum athanaal varuthalaal
kaaththompal sollinkat chorvu


Shuddhananda Bharati

Power of speech

Since gain or ruin speeches bring
Guard against the slips of tongue.


GU Pope

Power in Speech

Since gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend.

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.


Mu. Varadarajan

ஆக்கமும்‌ கேடும்‌ சொல்கின்ற சொல்லால்‌ வருதலால்‌ ஒருவன்‌ தன்னுடைய சொல்லில்‌ தவறு நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின் கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க.
விளக்கம்:
[ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின்' சுட்டுப் பெயர் முன்வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால், சொல்லின்கண் சோர் வைப் போற்றிக் காக்க வேண்டும்,
(என்றவாறு). இது சோர்வுபடாமற் சொல்லல் வேண்டு மென்றது.