குறள் 600

ஊக்கமுடைமை

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு

uramoruvatrku ulla vaerukkaiakh thillaar
marammakka laathalae vaeru


Shuddhananda Bharati

Energy

Mental courage is true manhood
Lacking that man is like a wood


GU Pope

Energy

Firmness of soul in man is real excellance;
Others are trees, their human form a mere pretence.

Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.


Mu. Varadarajan

ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம்‌ இல்லாதவர்‌ மரங்களே: (வடிவால்‌) மக்களைப்‌ போல்‌ இருத்தலே வேறுபாடு.


Parimelalagar

ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை-ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி; அஃது இல்லார் மரம்-அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு - சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை.
விளக்கம்:
('உரம்' என்பது அறிவாதல், "உரனென்னுந் தோட்டியான்" (குறள். 24) என்பதனானும் அறிக. மரம் என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும், மரத்திற்குள்ள பயன்பாடின்மைபற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும்; தேவர் கோட்டம், இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும், ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்கு அறிவாவது உள்ள மிகுதியுடைமை; அஃதில்லா தார் மரமென்று சொல்லப்படுவர்; மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகின்றது,
(என்றவாறு). இஃது அறிவும் இது தானே யென்றது.