குறள் 596

ஊக்கமுடைமை

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

ulluva thaellaam uyarvullal matrrathu
thallinundh thallaamai neerththu


Shuddhananda Bharati

Energy

Let thoughts be always great and grand
Though they fail their virtues stand.


GU Pope

Energy

Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (byfate), it will have the nature of not being thrust from him.


Mu. Varadarajan

எண்ணுவதெல்லாம்‌ உயர்வைப்‌ பற்றியே எண்ணவேண்டும்‌; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும்‌ அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.


Parimelalagar

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்-அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து-அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து.
விளக்கம்:
(உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க ; அந்நினைவு முடியா மல் தப்பினும், முயன்று பெற்றதனோடு ஒக்கும்,
(என்றவாறு) இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.