குறள் 549

செங்கோன்மை

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்

kutipurang kaaththompik kutrram katithal
vaduvanru vaendhthan tholil


Shuddhananda Bharati

Just government

Save his subjects and chide the wrong
Is flawless duty of a king.


GU Pope

The Right Sceptre

Abroad to guard, at home to punish, brings
No just reproach; 'tis work assigned to kings.

In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punishcrime is not a fault in a king, but a duty.


Mu. Varadarajan

குடிகளைப்‌ பிறர்‌ வருத்தாமல்‌ காத்துத்‌, தானும்‌ வருத்தாமல்‌ காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத்‌ தக்க தண்டனையால்‌ ஒழித்தல்‌, அரசனுடைய தொழில்‌; பழி அன்று.


Parimelalagar

குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர் மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
விளக்கம்:
[துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, ''அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதி தருமம்'' என்றார்.]


Manakkudavar

(இதன் பொருள்) குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காக, குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில்,
(என்றவாறு)