குறள் 471

வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

vinaivaliyum thanvaliyum maatrraan valiyum
thunaivaliyum thookkich seyal


Shuddhananda Bharati

Judging strength

Judge act and might and foeman's strength
The allies' strength and go at length.


GU Pope

The Knowledge of Power

The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.

Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength ofhis enemy, and the strength of the allies (of both), and then let him act.


Mu. Varadarajan

செயலின்‌ வலிமையும்‌, தன்‌ வலிமையும்‌, பகைவனுடைய வலிமையும்‌, இருவர்க்கும்‌ துணையானவரின்‌ வலிமையும்‌ ஆராய்ந்து செய்யவேண்டும்‌.


Parimelalagar

வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும்; தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்; துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.
விளக்கம்:
[இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால், தோற்றல் ஒரு தலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.]


Manakkudavar

வலியறிதலாவது தனக்கு உள்ள வலியும் பிறர்க்கு உள்ள வலியும் அறிதல். செய்யத்தக்க வினையை யெண்ணினாலும் அதனைச் செய்து முடிக்குங்கால் வலி யறிந்து செய்யவேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) செய்யும் வினையினது வலியும், தனக்கு உண்டான வலியும், பகைவனது வலியும், தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினை செய்க,
(என்றவாறு). இது வலியறியும் இடம் கூறிற்று.