குறள் 375

ஊழ்

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

nallavai yellaaandh theeyavaam theeyavum
nallavaam selvam seyatrku


Shuddhananda Bharati

Destiny

In making wealth fate changes mood;
The good as bad and bad as good.


GU Pope

Fate

All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.

In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).


Mu. Varadarajan

செல்வத்தை ஈட்டும்‌ முயற்சிக்கு, ஊழ்வகையால்‌ நல்லவை எல்லாம்‌ தீயவை ஆதலும்‌ உண்டு; தீயவை நல்லவை ஆதலும்‌ உண்டு.


Parimelalagar

செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு; நல்லவை எல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம் - அதுவேயன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும் ஊழ்வயத்தான்.
விளக்கம்:
('நல்லவை' 'தீயவை' என்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலாயவற்றை. 'ஊழான்' என்பது அதிகாரத்தால் பெற்றாம். அழிக்கும் ஊழ் உற்றவழிக் காலம் முதலிய நல்லவாயினும் அழியும்; ஆக்கும் ஊழ் உற்றவழி அவை தீயவாயினும் ஆகும் என்பதாயிற்று. ஆகவே, காலம் முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்கும் என்பது பெற்றாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்கு முன்பு தீதாயிருந்தன வெல் லாம் நன்றாம்; அச்செல்வத்தை யில்லையாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தன வெல்லாம் தீதாம்,
(என்றவாறு)