குறள் 373

ஊழ்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்

nunniya noolpala katrpinum matrrundhthan
unmai yarivae mikum


Shuddhananda Bharati

Destiny

What matters subtle study deep?
Levels of innate wisdom-keep.


GU Pope

Fate

In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy.

Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.


Mu. Varadarajan

ஒருவன்‌ நுட்பமான நூல்‌ பலவற்றைக்‌ கற்றாலும்‌, ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும்‌ அறிவே மேற்பட்டுத்‌ தோன்றும்‌.


Parimelalagar

நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும்.
விளக்கம்:
(பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல்-கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். "காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்" (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும்,
(என்றவாறு). மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதொற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு , ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய்வறிவு வலியுடைத் தென்றார்.