குறள் 355

மெய்யுணர்தல்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

yepporul yeththanmaith thaayinum apporul
maeipporul kaanpathu arivu


Shuddhananda Bharati

Truth consciousness

Knowledge is Truth of things to find
In every case of every kind.


GU Pope

Knowledge of the True

Whatever thing, of whatsoever kind it be,
'Tis wisdom's part in each the very thing to see.

(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.


Mu. Varadarajan

எப்பொருள்‌ எத்தன்மையதாய்த்‌ தோன்றினாலும்‌ (அத்‌ தோற்றத்தை மட்டும்‌ கண்டு மயங்காமல்‌) அப்பொருளின்‌ உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்‌.


Parimelalagar

எப்பொருள் எத்தன்மையத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு . அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது.
விளக்கம்:
(பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது, 'கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை' என்றவழி, அரசன் என்பதோர் சாதியும், சேரமான் என்பதொரு குடியும் , வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றால், காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய் நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான், இயங்குதினையும நிலைத்திணையும் ஆகிய பொருள்கள் எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான், மெய் உணர்வினது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும், அப்பொருளி னுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம்,
(என்றவாறு). மெய்யென்பதூஉம் அறிவென்பதாஉம் ஒன்று ; என்னை? எக்காலத்தும் எவ் விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின், மெய்யாயிற்று; எல்லாப் பொருளையுங் காண்டலால், அறிவாயிற்று.