குறள் 1257

நிறையழிதல்

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்

naanaena onno ariyalam kaamaththaal
paeniyaar paetpa seyin


Shuddhananda Bharati

Reserve lost

When lover's love does what it desires
We forget all shame unawares.


GU Pope

Reserve Overcome

, No sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love.

I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).


Mu. Varadarajan

நாம்‌ விரும்பிய காதலர்‌ காமத்தால்‌ நமக்கு விருப்பமானவற்றைச்‌ செய்வாரானால்‌, நாணம்‌ என்று சொல்லப்படும்‌ ஒரு பண்பையும்‌ அறியாமலிருப்போம்‌.


Parimelalagar

பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணியார் காமத்தாற் பெட்ப செயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்.
விளக்கம்:
('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக, விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின்,
(என்றவாறு) அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகாதென்றவாறு.