குறள் 1239

உறுப்புநலனழிதல்

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்

muyakkitaith thanvali polap pachapputrra
paethai paerumalaik kan


Shuddhananda Bharati

Limbs languish

Cool breeze crept between our embrace
Her large rain-cloud-eyes paled at once.


GU Pope

Wasting Away

As we embraced a breath of wind found entrance there;
The maid's large liquid eyes were dimmed with care.

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.


Mu. Varadarajan

தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழையக்‌ காதலியின்‌ பெரிய மழை போன்ற கண்கள்‌ பசலைநிறம்‌ அடைந்தன.


Parimelalagar

இதுவும் அது. முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக்கண்கள் பசப்புற்றன; அத்தன்மையாவன கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன?
விளக்கம்:
(தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி.)


Manakkudavar

(இதன் பொருள்) யான் பிரிவதாக நினைத்து, முயக்கத்தின் கண்ணே எனது உடம் பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று உடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன,
(என்றவாறு). இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.