குறள் 1182

பசப்புறுபருவரல்

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு

avarthandhthaar yennum thakaiyaal ivarthandhthaen
maenimael oorum pachappu


Shuddhananda Bharati

Wailing over pallor

Claiming it is begot through him
Pallor creeps and rides over my frame.


GU Pope

The Pallid Hue

'He gave': this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes.

Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.


Mu. Varadarajan

அந்தக்‌ காதலர்‌ உண்டாக்கினார்‌ என்னும்‌ பெருமிதத்தோடு இந்தப்‌ பசலைநிறம்‌ என்னுடைய மேனிமேல்‌ ஊர்ந்து பரவி வருகின்றது.


Parimelalagar

ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. யான் ஆற்றியுளேனாகவும்; பசப்பு இப் பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என்மேனிமேல் இவர் தந்து ஊரும் - என்மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.
விளக்கம்:
(''குருதி கெப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல'' (சீவக விமலை. 1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல் அறிக. 'அஃது உரிமை பற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம் பின் மேலே பரந்து ஊரும்,
(என்றவாறு). இஃது இப்பசலையை நீக்க வேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பி னாலே வந்ததல்ல ; நீக்கவேண்டுவாயாயின், அவர்க்குச் சொல்லென்று கூறியது.