குறள் 1147

அலரறிவுறுத்தல்

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்

ooravar kelavai yeruvaaka annaisol
neeraaka neelumindh noi


Shuddhananda Bharati

Public clamour

Scandal manures; mother's refrain
Waters the growth of this love-pain.


GU Pope

The Announcement of the Rumour

My anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it.

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.


Mu. Varadarajan

இந்தக்‌ காமநோய்‌ ஊராரின்‌ அலர்‌ தூற்றலே எருவாகவும்‌ அன்னை கடிந்து சொல்லும்‌ கடுஞ்சொல்லே நீராகவும்‌ கொண்டு செழித்து வளர்கின்றது.


Parimelalagar

வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, 'ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்' எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது. இந்நோய் - இக்காமநோயாகிய பயிர்; ஊரவர் கெளவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது.
விளக்கம்:
('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏகதேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஊரார் எடுத்த அலர் எருவாக, அன்னை சொல்லும் சொற்கள் நீராக, இந்நோய் வளராநின்றது,
(என்றவாறு) இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவை யிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.