குறள் 881

உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்

nilalneerum innaatha innaa thamarneerum
innaavaam innaa seyin


Shuddhananda Bharati

Secret foe

Traitorous kinsmen will make you sad
As water and shade do harm when bad.


GU Pope

Enmity within

Water and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane.

Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.


Mu. Varadarajan

இன்பம்‌ தரும்‌ நிழலும்‌ நீரும்‌ நோய்‌ செய்வனவாக இருந்தால்‌ தீயனவே ஆகும்‌; அதுபோலவே, சுற்றத்தாரின்‌ தன்மைகளும்‌ துன்பம்‌ தருமானால்‌ தீயனவே ஆகும்‌.


Parimelalagar

நிழல் நீரும் இன்னாத இன்னா ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அது போலத் தழுவவேண்டுவனவாய தமரியல் புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம்.
விளக்கம்:
(நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.)


Manakkudavar

உட்பகையாவது உடனே வாழும் பகைவர் செய்யுந்திறங் கூறுதல். அஃ தாவது புறம்பு நட்டார் போன்றும் சுற்றத்தாராயும் ஒழுகி மனத்தினாற் பகைத்திருப்பார் செய்யுந் திறங்கூறுதல். இதுவும் ஆராய்ந்து காக்கவேண்டுமாத லின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நிழல்கத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும்; அதுபோல, சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாத வற்றைச் செய்வாராயின், அஃது இன்னாதாயே விடும், (எ - ற ). இது சுற்றமென் றிகழற்க என்றது.