குறள் 743

அரண்

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்

uyarvakalam thinmai arumaiindh naankin
amaivaran yenruraikkum nool


Shuddhananda Bharati

Fortress

An ideal fort's so says science:
High, broad, strong and hard for access.


GU Pope

The Fortification

Height, breadth, strength, difficult access:
Science declares a fort must these possess.

The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth,strength and inaccessibility.


Mu. Varadarajan

உயரம்‌, அகலம்‌, உறுதி, பகைவரால்‌ அழிக்க முடியாத அருமை ஆகிய நான்கும்‌ அமைந்திருப்பதே அரண்‌ என்று நூலோர்‌ கூறுவர்‌.


Parimelalagar

உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
('அமைவு', 'நூல்' என்பன ஆகுபெயர் - உயர்வு - ஏணி யெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, "வளைவிற் பொறியும் அயிற்செறி நிலையும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெத்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும், கல்லிடு கூடையும், தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும், கவையும் கழுவும் புதையும் புழையும், ஐயவித் துலாமும் கைபெய ரூசியும், சென்றெறி சிரலும், பன்றியும் பணையும், எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும்,கோலும் குந்தமும் வேலும் சூலமும்" (சிலப். அடைக் 207-216) என்றிவை முதலாயின.)


Manakkudavar

(இதன் பொருள்) உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென் னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர். திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.