குறள் 729

அவையஞ்சாமை

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்

kallaa thavarin kataiyaenpa katrrarindhthum
nallaa ravaiyanjsu vaar


Shuddhananda Bharati

Courage before councils

Who fear to face good assembly
Are learned idiots, certainly.


GU Pope

Not to dread the Council

Who, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take.

They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, aresaid to be inferior (even) to the illiterate.


Mu. Varadarajan

நூல்களைக்‌ கற்றறிந்தபோதிலும்‌ நல்ல அறிஞரின்‌ அவைக்கு அஞ்சுகின்றவர்‌, கல்லாதவரைவிடக்‌ கடைப்பட்டவர்‌ என்று கூறுவர்‌.


Parimelalagar

கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப - உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர்.
விளக்கம்:
(அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர் ; உலகநூல் கற்றறிந்துவைத்தும், நல்லாரிருந்த அவையின் கண் சொல்லுதலஞ்சுவார். இது கல்லா தவரினும் இகழப்படுவரென்றது.