குறள் 651

வினைத்தூய்மை

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

thunainalam aakkam tharooum vinainalam
vaentiya yellaandh tharum


Shuddhananda Bharati

Purity of action

Friendship brings gain; but action pure
Does every good thing we desire.


GU Pope

Purity in Action

The good external help confers is worldly gain;
By action good men every needed gift obtain.

The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.


Mu. Varadarajan

ஒருவனுக்கு வாய்ந்த துணையின்‌ நன்மை ஆக்கத்தைக்‌ கொடுக்கும்‌; செய்யும்‌ வினையின்‌ நன்மை அவன்‌ விரும்பிய எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

துணை நலம் ஆக்கம் தரூஉம்- ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும்.
விளக்கம்:
['வேண்டிய எல்லாம்' என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலியவற்றையும், மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும், கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.]


Manakkudavar

வினைத்தூய்மையாவது செய்யும் வினையைக் குற்றம் பயவாமற் செய்தல். மேற் சொல்லுங்கால் சொல்வதையும் பிறர் விரும்புமாறு சொல்லல் வேண்டு மென்றார், செய்வினையையும் அவ்வாறு செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப் பட்டது. (இதன் பொருள்) துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவே யன்றி, வேண்டிய வெல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும்,
(என்றவாறு). துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப்படுதலின், ஈண்டு ஏதுவாக வந்தது.