குறள் 636

அமைச்சு

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை

mathinutpam noolodu utaiyaarkku athinutpam
yaavula munnitr pavai


Shuddhananda Bharati

Ministers

Which subtler brain can stand before
The keen in brain with learned love?


GU Pope

The Office of Minister of state

When native subtilty combines with sound scholastic lore,
'Tis subtilty surpassing all, which nothing stands before.

What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.


Mu. Varadarajan

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய்‌ முன்‌ நிற்பவை எவை உள்ளன?


Parimelalagar

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு-இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யா உள-மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?
விளக்கம்:
('மதி நுட்பம்' என்பது பின் மொழி நிலையல். அது தெய்வம் தர வேண்டுதலின் முன் கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதி நுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது உட சொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல்; அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம்யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப் பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணிதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற் கும் வினைகள் யாவுள?
(என்றவாறு) இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.