குறள் 584

ஒற்றாடல்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

vinaiseivaar thamsutrram vaentaathaar yenraangku
anaivaraiyum aaraaivathu otrru


Shuddhananda Bharati

Espionage

His officers, kinsmen and foes
Who watch keenly are worthy spies.


GU Pope

Detectives

His officers, his friends, his enemies,
All these who watch are trusty spies.

He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.


Mu. Varadarajan

தம்முடைய தொழிலைச்‌ செய்கின்றவர்‌, தம்‌ சுற்றத்தார்‌, தம்‌ பகைவர்‌ என்று கூறப்படும்‌ எல்லாரையும்‌ ஆராய்வதே ஒற்றரின்‌ தொழிலாகும்‌.


Parimelalagar

தம்வினை செய்வார், சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது-தம் காரியம் செய்வார், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே. ஒற்று-ஒற்றனாவான்.
விளக்கம்:
('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி அவனுக்குக் காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்து நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும் அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும் எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும் ஆராய்வது ஒற்று' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும், தமக்குச் சுற்றமாயிருப்பாரும், தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந் தறிவான் ஒற்றனாவன்,
(என்றவாறு). இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.