குறள் 582

ஒற்றாடல்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

yellaarkkum yellaam nikalpavai yenjgnyaanrum
vallarithal vaendhthan tholil


Shuddhananda Bharati

Espionage

All that happens, always, to all
The king should know in full detail.


GU Pope

Detectives

Each day, of every subject every deed,
'Tis duty of the king to learn with speed.

It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.


Mu. Varadarajan

எல்லாரிடத்திலும்நிகழ்கின்றவை எல்லாவற்றையும்‌ எக்காலத்திலும்‌(ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல்‌ அரசனுக்குரிய தொழிலாகும்‌.


Parimelalagar

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல்- எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில்-அரசனுக்கு உரிய தொழில்.
விளக்கம்:
('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆகலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தஞ்சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப்பற்றி நிகழ்பவையெல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்தறிதல் வேந்தனது தொழில்,
(என்றவாறு).