குறள் 571

கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

kannotdam yennum kalipaerung kaarikai
unmaiyaan untiv vulaku


Shuddhananda Bharati

Benign looks

Living in the world implies
The bounteous dame of benign eyes.


GU Pope

Benignity

Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.


Mu. Varadarajan

கண்ணோட்டம்‌ என்று சொல்லப்படுகின்ற மிகச்‌ சிறந்த அழகு இருக்கும்‌ காரணத்தால்தான்‌, இந்த உலகம்‌ அழியாமல்‌ இருக்கின்றது.


Parimelalagar

கண்ணோட்டம் என்னும் கழி பெருங் காரிகை உண்மையான்- கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு-இவ்வுலகம் உண்டாகாநின்றது.
விளக்கம்:
('கழிபெருங்காரிகை' என்புழி ஒரு பொருட் பன்மொழி. இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெகு வந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார்.)


Manakkudavar

கண்ணோட்டமாவது கண்ணாற் காணப்பட்டாரை யருள் செய்தல். குற்றஞ்செய்தாரை ஒறுக்குங்கால் உலகத்தாரிசைய ஒறுக்கவேண்டுமென்றாராயி னும் அவ்வாறு செய்தவரைத் தமது கண்முன்னாகக் கண்டால் அதனைப் பொறுத் தலும் வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. இது பெரும்பான்மை யும் முன்பு கண்டு பழகினார் மேற்று. (இதன் பொருள்) கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன் மாட்டு உண்டான படி யினாலே, இவ்வுலகநடை யாகின்றது,
(என்றவாறு). இஃது அஃ தில்லையாயின், உலகங் கெடும்; ஆதலால், கண்ணோடவேண்டு மென்றது.