குறள் 43

இல்வாழ்க்கை

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

thaenpulaththaar thaeivam virundhthokkal thaanaenraangku
aimpulaththaaru oampal thalai


Shuddhananda Bharati

Married Life

By dutiful householder's aid
God, manes, kin, self and guests are served.


GU Pope

Domestic Life

The manes, God, guests kindred, self, in due degree,
These five to cherish well is chiefest charity.

The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.


Mu. Varadarajan

தென்புலத்தார்‌, தெய்வம்‌, விருந்தினர்‌, சுற்றத்தார்‌, தான்‌ என்ற ஐவகையிடத்தும்‌ அறநெறி தவறாமல்‌ போற்றுதல்‌ சிறந்த கடமையாகும்‌.


Parimelalagar

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று-பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார்தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை-ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம் ஆம்.
விளக்கம்:
(பிதிரராவார்: படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். 'தெய்வம்' என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்; பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும்தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின், தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற', என்பது விகாரமாயிற்று. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந் திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான வில்வாழ்க்கை ,
(என்றவாறு). தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒரு கூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூ றென்றற்குத் தன்னையு மெண் ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று; என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின். மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையின் ரென்று கொள்ளப்படுவர்.