Kural 41
குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
ilvaalvaan yenpaan iyalputaiya moovarkkum
nallaatrrin ninra thunai
Shuddhananda Bharati
The ideal householder is he
Who aids the natural orders there.
GU Pope
The men of household virtue, firm in way of good, sustain
The other orders three that rule professed maintain.
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.
Mu. Varadarajan
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
Parimelalagar
இல்வாழ்வான் என்பான்-இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை-அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்.
விளக்கம்:
('இல்' என்பது ஆகுபெயர். 'என்பான்' எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார்; ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத்தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி, நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.)
Manakkudavar
இல்லறமாவது இல்லின்கணிருந்து தான் முதலாயின் செய்தல். அது கூறிய அதிகார மிருபதினும் இல்வாழ்வான் வாழுந்திற மோரதிகாரத்தானும் அதற்குத் துணையான மனைவி யிலக்கணம் ஓரதிகாரத்தானும் கூறி, அதன் பின் இல்லறப் பகுதியான பிரமசரியங் காருகத்தமென்னு மிரண்டினுள்ளும் பிரம் சரியத்திற்கு ஆதாரமாகிய புதல்வரைப் பெறுதல் ஓரதிகாரத்தாற் கூறிக் , காருகத்த விலக்கணங் கூறுவார் நல்கூர்ந்தார், நல்குரவினீங்கினார், செல்வர், வள்ளியோரென்னும் நால்வரினும் அன்புடைமை முதலாக ஒழுக்கமுடைமை யீறாக நல்கூர்ந்தாராற் செய்யப்படுவன வேழும், பிறனில் விழையாமை முதலாகத் தீவினையச்சமீறாக இவராற் றவிரப்படுவனவேழும் பதினான்கதிகாரத்தாற் கூறி, இவற்றோடுங்கூட ஒப்புரவறிதல் நல்குரவினீங்கினாராற் செய்யப்படுமென்று கூறி, இவற்றோடுங்கூட ஈதல் செல்வராற் செய்யப்படுமாறு கூறி, இவற்றோடுங் கூடப் புகழ் வள்ளியோராற் செய்யப்படுமென்று கூறினாராகக் கொள்ளப்படும். இவ்வறம் முற்படக் கூறியது ; துறவறத்தினின்றாரையும் ஓபுதல் இல்வாழ்வான் கண்ணதாதலான். அவற்றுள், இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழும் திறன் கூறுதல். மேல் அறஞ் செய்க வென்றார் இது முதலாக அறஞ் செய்யுமாறு கூறுகின்றாராதலின், இது பிற்கூறப்பட்டது. (இதன் பொருள்) இல்வாழ்வானென்று சொல்லப்படுவன் இயல்புடைய மூவர்க் கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொரு துணை,
(என்றவாறு). என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின் பாற்பட்ட விரதங் கொண் டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற்கொண் டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின், அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்றது இடையூறு வாராம லுய்த்து விடுவாரை.