குறள் 307

வெகுளாமை

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

sinaththaip porulaenru kondavan kaedu
nilaththaraindhthaan kaipilaiyaa thatrru


Shuddhananda Bharati

Restraining anger

The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.


GU Pope

The not being Angry

The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.

Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.


Mu. Varadarajan

(தன்‌ வல்லமை புலப்படுத்தச்‌) சினத்தைப்‌ பொருளென்று கொண்டவன்‌ அழிதல்‌, நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல்‌ ஆகும்‌.


Parimelalagar

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.
விளக்கம்:
(வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றார்போல, ஈண்டுக் குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்த வன்கை தப்பாமற் பட்டது போலும்,
(என்றவாறு). இது பொருட்கேடு வருமென்றது.