குறள் 1291

நெஞ்சொடுபுலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது

avarnaenjsu avarkkaathal kandum yevannaenjsae
neeyemakku aakaa thathu


Shuddhananda Bharati

Chiding the heart

You see, his heart is his alone;
Why not my heart be all my own?


GU Pope

Expostulation with Oneself

You see his heart is his alone
O heart, why not be all my own?

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?


Mu. Varadarajan

நெஞ்சே! அவருடைய நெஞ்சம்‌ (நம்மை நினையாமல்‌ நம்மிடம்‌ வராமல்‌) அவர்க்குத்‌ துணையாதலைக்‌ கண்டும்‌ நீ எமக்குத்‌ துணையாகாதது ஏன்‌?


Parimelalagar

தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது?
விளக்கம்:
(அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். 'எமக்காகாதது' என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை,' என்பதாம்.)


Manakkudavar

நெஞ்சொடுபுலத்தலாவது தலைமகன் பரத்தையிற் பிரிந்துழி அவனோடு புலக்கக் கருதிய தலைமகள் முற்பட அவனோடு கூட வேண்டிய நெஞ்சோடு புலந்து கூறுதல். இனி ஊடிக்கூடல் கூறுகின்றாராகலின், அவ்வூடுதலின் முற்பட இது தோற்றுமாதலின், முற்கூறப்பட்டது. (இதன் பொருள்) அவருடைய நெஞ்சம் அவர் வழி நின்று நம்மை நினையாமை யைக் கண்டு வைத்தும், நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ ?
(என்றவாறு). இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.