குறள் 1281

புணர்ச்சிவிதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

ullak kaliththalum kaana makilthalum
kallukkil kaamaththitr kundu


Shuddhananda Bharati

Longing for reunion

Rapture at thought and joy when seen
Belong to love and not to wine.


GU Pope

Desire for Reunion

Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight.

To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.


Mu. Varadarajan

நினைத்த அளவிலே களிப்படைதலும்‌ கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும்‌ ஆகிய இந்த இருவகைத்‌ தன்மையும்‌ கள்ளுக்கு இல்லை: காமத்திற்கு உண்டு.


Parimelalagar

(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு. (களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)


Manakkudavar

புணர்ச்சிவிதும்பலாவது பிரிந்து கூடின தலைமகனும் தலைமகளும் புணர்தல் வேண்டி ஒருவரினொருவர் முந்து முந்து விரைதல். (இதன் பொருள்) காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும், கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாக வுடைய கள்ளிற்கு இல்லை; காமத்திற்கு உண்டு, (எ - று ) கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு; காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.