குறள் 1171

கண்விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது

kanthaam kalulva thaevankolo thantaanoi
thaamkaatda yaamkan dathu


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

The eye pointed him to me; why then
They weep with malady and pine?


GU Pope

Eyes consumed with Grief

They showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain?

As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).


Mu. Varadarajan

தீராத இக்காமநோய்‌, கண்கள்‌ காட்ட யாம்‌ கண்டதால்‌ விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள்‌ தாமே இப்போது அழுவது ஏன்‌?


Parimelalagar

'நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன; நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி?
விளக்கம்:
('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது?' என்பதாம்.)


Manakkudavar

கண்விதுப்பழிதலாவது கண் தனது விரைவினால் அழிந்தமை தலைமகள் தோழிக்குக் கூறுதல். பிரிவின் கண் துன்பமுற்றார்க்குக் கண்ணீர் முற்பாடு தோன்றுமாதலின் தனது ஆற்றாமையை ஒன்றன் மேலிட்டுக் கூறுவாள் அதனை முற்பாடு கண்ணின் மேலிட்டுக் கூறுதலால், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) அரையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங் காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள் தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி ?
(என்றவாறு). இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.