குறள் 1101

புணர்ச்சிமகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

kandukaetdu unduyirththu utrrariyum aimpulanum
onthoti kannae ula


Shuddhananda Bharati

Embrace bliss

In this bangled beauty dwell
The joys of sight sound touch taste smell.


GU Pope

Rejoicing in the Embrace

All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
In this resplendent armlets-bearing damsel live!

The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only befound with bright braceleted (women).


Mu. Varadarajan

கண்டும்‌ கேட்டும்‌ உண்டும்‌ முகர்ந்தும்‌ உற்றும்‌ அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும்‌ ஒளி பொருந்திய வளையல்‌ அணிந்த இவளிடத்தில்‌ உள்ளன.


Parimelalagar

இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் - கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள்கண்ணே உளவாயின.
விளக்கம்:
(உம்மை, முற்று உம்மை. தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது. வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.)


Manakkudavar

புணர்ச்சிமகிழ்தலாலது தலைமகள் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகன் புணர்ச்சியினை மகிழ்ந்து கூறுதல். (இதன் பொருள்) கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும், இவ்வெள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள்,
(என்றவாறு). இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒரு காலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சி சியை வியந்து கூறியது.