குறள் 1051

இரவு

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று

irakka iraththakkaark kaanin karappin
avarpali thampali anru


Shuddhananda Bharati

Asking

Demand from those who can supply
Default is theirs when they deny.


GU Pope

Mendicancy

When those you find from whom 'tis meet to ask,- for aid apply;
Theirs is the sin, not yours, if they the gift deny.

If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.


Mu. Varadarajan

இரந்து கேட்கத்‌ தக்கவரைக்‌ கண்டால்‌ அவரிடம்‌ இரக்க வேண்டும்‌; அவர்‌ இல்லையென்று ஒளிப்பாரானால்‌ அது அவர்க்குப்‌ பழி; தமக்குப்‌ பழி அன்று.


Parimelalagar

இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான்.
விளக்கம்:
('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர் கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும், ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.)


Manakkudavar

இரவாவது பிறர்மாட்டுச் சென் றிரந்து கோடல். இது நல்கூர்ந்தார் செய் லாதலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின், இரந்து கொள்க; அவர் இல்லை யென்பாராயின், அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது,
(என்றவாறு) இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகாதென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.