குறள் 1038

உழவு

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு

yaerinum nanraal yeruviduthal katdapin
neerinum nanrathan kaappu


Shuddhananda Bharati

Farming

Better manure than plough; then weed;
Than irrigating, better guard.


GU Pope

Agriculture

To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now

Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).


Mu. Varadarajan

ஏர்‌ உழுதலைவிட எரு இடுதல்‌ நல்லது; இந்த இரண்டும்‌ செய்து களை நீக்கிய பிறகு, நீர்‌ பாய்ச்சுதலை விடக்‌ காவல்‌ காத்தல்‌ நல்லது.


Parimelalagar

ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர் கால்யாத்தலினும் நன்று.
விளக்கம்:
(ஏர் - ஆகுபெயர். காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல், உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர் கால்யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்.) --


Manakkudavar

(இதன் பொருள்) உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல் ; களை கட்ட பின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல்,
(என்றவாறு). இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம், எருவிட வேண்டு மென்பதூஉம், களை பறிக்க வேண்டுமென்பதூஉம், பசுப் புகுதாமற் காக்கவேண்டுமென்பதூஉம் கூறிற்று.